மணிமேகலையும் ஊழ்வினையும்…..

தர்மபூபதி ஆறுமுகம்

சங்க கால இலக்கியங்களில் மறுபிறவி குறித்தும் ஊழ்வினைகளால் மறுபிறவியில் எவ்வாறு பிறப்பெடுக்கிறார்கள் என்பதும் இலக்கியங்களின் மைய கருத்தாக இருந்து வந்திருக்கிறது.அந்த வகையில் சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் முக்கியமானவையாகும்.சிலப்பதிகாரத்தை தொடர்ந்து உருவான  இலக்கியம் மணிமேகலையாகும்.சிலப்பதிகார காவிய நாயகிகள் இருவர்.கண்ணகி,மாதவி.அந்த மாதவியின் மகள் தான் மணிமேகலை – இலக்கியத்தின் நாயகி. இந்த மணிமேகலை என்ற காவிய பாத்திரத்தைச் சுற்றி ஆதிரை,காய கண்டிகை,உதயணன் என்ற பாத்திரங்கள் உலாவருகிறது.அந்த அற்புதமான கதாபாத்திரங்களின் காவிய வரலாற்றையும் ஊழ்வினையின் செயல்பாட்டினையும் அற்புதமாக தந்திருக்கிறார் சீத்தலை சாத்தனார்.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலனின் மனைவி கண்ணகி. கோவலனின் காதலி கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவி. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் “மணி மேகலை”. மரக்கலம் உடைந்து, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தன் முன்னோர்களில் ஒருவனைக் காப்பாற்றிக் கரைசேர்த்தது “மணி மேகலா தெய்வம்”, அந்த தெய்வத்தின் மீது உள்ள பக்தியின் காரணமாகத் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு “மணிமேகலை” எனப் பெயர் சூட்டினான் கோவலன். கடலில் பயணம் மேற்கொள்ளும் நல்லோருக்கு இடுக்கண் வருமாயின் அவர்களின் துயரைத் தீர்க்கும் கடற்காவல் தெய்வத்தாய் “மணிமேகலா தெய்வம்” ஆகும்.

பொருள் ஈட்டுவதற்காக மதுரை சென்ற கோவலன்,  பாண்டிய அரசியின் சிலம்பு ஒன்றினைத் திருடிய கள்வன் என்று பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்படுகிறான். அதனை அறிந்த மாதவி தன் பொருட்களை எல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர்த் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள்.கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள். தன் பெண்ணான மணிமேகலையையும் துறவறத்தில் ஈடுபடுத்துகிறாள்.

வழக்கம்போல பூம்புகாரில் இந்திராவிழா நடைபெறுகிறது.இந்திரவிழாவில் நாடக மடந்தையரின் ஆடலும் பாடலும் முதன்மையானவை.ஆனால் அந்த ஆண்டு மாதவியும் மணிமேகலையும் பங்கேற்காத விழாவாக இந்திர விழா நடைபெறுகிறது. இதனால் ஊர் மக்கள் அவர்களைப் பற்றிப் பழி பேசுகின்றனர்.  ஊர் பழிக்கவே,  மாதவியின் தாயான சித்ராபதி,மாதவியின் தோழி வயந்தமாலையை அழைத்து ஊர்ப் பழியைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள். ஊர்பழியைத் தீர்க்க வயந்தமாலை மாதவி மணிமேகலை இருவரையும் இந்திர விழாவிற்கு வருமாறு வேண்டுகிறாள்.ஆனால் மாதவி தான் கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் விளக்கிக் கூறுகிறாள்.இனிமேற்கொண்டு எந்த ஆடல்பாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும், இனி தங்களது வாழ்வு புதிய பாதையில் செல்லப் போவதையும் மாதவி உறுதிபடக் கூறுகிறாள்

காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை …
(ஊர் அலர் உரைத்த காதை, 54-57)

என்றும் உரைக்கிறாள். மணிமேகலையை ‘மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்’ என்று சொல்வதன் மூலம் மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையைத் தெளிவாக உணர்த்திவிடுகிறாள்.

கோவலன்,  கண்ணகி,  மாதவி ஆகிய மூவருக்கும் ஏற்பட்ட துன்பங்களை மாதவி வயந்தமாலையிடம் கூறியதைக் கேட்டு, துறவறத்தில் மூழ்கி புதுப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்ட மணிமேகலையின் கண்களில் ஆறாகப் பெருக்கெடுக்கிறது.புத்தபெருமானுக்கு பூமாலை கட்டிக்கொண்டிருந்த மணிமேகலையின் கண்கள் ஆறாகப் பெருக்கெடுத்து கட்டிய பூமாலைகள் மீது விழுந்து நனைக்கிறது.இதைக் கண்ணுற்ற மாதவி,வேறு பூக்களை பறித்து மாலை தொடுக்குமாறு கூறுகிறாள். மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் சோலைக்குச் செல்கின்றனர்.

மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான்.   உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.தனது நெஞ்சம் ஏன் இப்படித் தடுமாறுகிறது என்பதை தோழியிடம் கூறுகிறாள்.அதை மாற்ற வேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். அப்போது இந்திர விழாவினைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்துகொள்கிறது.    எனவே மணிமேகலையையும் சுதமதியையும் உதயகுமரனிடமிருந்து தப்புவிக்க அவர்களைச் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுமாறு கூறுகிறது. மேலும் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாற்றையும் கூறுகிறது. இதற்குள் இரவுப் பொழுதாகிறது. சுதமதி அங்கேயே உறங்கிவிடுகிறாள். உறங்க ஆரம்பித்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து முப்பது யோசனைத் தூரம் வான் வழியாக எடுத்துச் சென்று மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்துவிட்டுச் செல்கிறது.

மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள் முன் புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனமான புத்த தரும பீடிகை தோன்றுகிறது. அதைக் காண்போருக்கு அவர்களுடைய பழம்பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள்.  அதன் மூலம் தன் பழம்பிறப்பை உணர்கிறாள்.

முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்தாள் மணிமேகலை. செல்வச்செழிப்புடனும் வனப்புடனும் வளர்ந்த லக்குமி தனது மனதுக்குப் பிடித்த ராகுலனை திருமணம் செய்து கொள்கிறாள்.இனிமையான இல்லறம் தொடர்கிறது.ஆனால் காலன் பாம்புருவில் வந்து ராகுலனை தீண்டி,எம உலகிற்கு அழைத்து செல்கிறான்.தனது பாசக் கணவனின் உடல் தீயிட்டு கொளுத்தப்படும்போது அந்த சிதையில் தானும் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள் லக்குமி.இவ்வாறு தனது முற்பிறவியின் ரகசியங்களை அறிந்து கொள்கிறாள் மாதவி.அந்த ராகுலன் தான் இந்த பிறவியில் உதயணன் என்பதையும் அதனாலேயே தன் நெஞ்சம் அவனை நாடுகிறது என்பதையும் புரிந்து கொள்கிறாள் மணிமேகலை. இவைகளையெல்லாம் மணிமேகலைக்கு புரியவைத்த மணிமேகலா தெய்வம்,  மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழியாகச் சென்று வர உதவும் மந்திரத்தையும்,  பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது.

மணிமேகலை அங்குள்ள கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளையும் மாதவியையும் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள். மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள், கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள்.

புகார் நகரம் வணிகர்களுக்கும் வணிகத்திற்கும் பெயர் போனது.செல்வ செழிப்போடு வாழ்ந்த வணிகர்கள் சிலர் அவ்வப்போது கணிகையர்களோடு சிலகாலம் வாழ்வதும்,பிறகு ஈட்டிய பொருட்களை தொலைத்து மீள்வதும் வாடிக்கையான ஒன்று.அப்படிப்பட்ட வணிகர்களில் சாதுவான் என்பவரும் ஒருவர்.

ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது.  சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர்.  சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர்.  அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள்.  தீயில் குதித்தாள்.  ஆனால் தீ அவளைச் சுடவில்லை.  ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’  என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர்.  சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான்.  நல்லறிவு பெற்ற நாகர் தலைவன்,  சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான்.  அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான்.  ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

ஆதிரையின் வரலாற்றைக் கூறி கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு காயசண்டிகை கூற,  மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள்.  ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே!  என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தனக்கு தீராப்பசி ஏற்படக்காரணமான சாபத்தை மணிமேகலையிடம் கூறுகிறாள்.

“வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்துவிட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர்.   நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன்.  இதை நீ சிதைத்தாய்.  ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாக’ எனச் சபித்தான்.  முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசி தீர்ந்தேன்” என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.

மணிமேகலை,உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான்.

காயசண்டிகையை சந்திக்க வந்த அவள் கணவன் காஞ்சனன், மாற்று உருவில் இருக்கும் மணிமேகலையை தனது மனைவி எனத் தவறாக எண்ணி,தகாது நடக்கும் உதயணனை தனது வாளால் வெட்டிக் கொல்கிறான்.அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு,நடந்த உண்மைகளை சொல்கிறது. அதுமட்டுமல்லாது காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள்.  ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள்.  மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள்.  காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள்.  பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள்.  அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள்.  அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள்.  அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான்.  அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம்,  கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது,  மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது.  உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது.  மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து,   அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி,  பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள்.  அவள் மனம் அமைதி பெறவில்லை.  அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள்.  அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள்.  அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர் மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள்.

முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’  என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள்.மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: