Archive for the ‘தமிழ்’ Category

நாராய்,நாராய்,செங்கால் நாராய்!

June 26, 2017

ஆறு.தர்மபூபதி

இன்றைக்கு தினமணியில்(26.6.2017) செய்தி,தலைப்பு:

image

இந்த தலைப்பை பார்த்ததும் அன்றைய புலவர்களும் இன்றைய கவிஞர்களுமே நினைவிற்கு வந்தனர். அந்த நினவிலேயே இந்த சங்ககால தனிப்பாடல் சுவையை சிறிய வயதில் படிக்கும் காலத்தில் சுவைத்திருந்தாலும் இப்போதும் அதே சுவை.

அந்தக்காலத்திலெல்லாம் இன்றைய கவிஞர்கள் போன்று அன்றைய புலவர்கள் இல்லை.அன்றைய புலவர்கள் வசதியற்று வாழவழியில்லாமல் ஒவ்வொரு ஊராக அலைந்து மன்னர்களைப் பார்த்துப் பாடி பரிசுகள் பெற்று வாழ்ந்த காலம்.இன்று போல பைஜாமா மாட்டி ஒப்பனை செய்து வாயாலே ஜாலங்கள் செய்ததைப் போன்று அன்றைய புலவர்கள் இல்லை வறுமை வாட்டினாலும் புலமை வாடாத பண்டிதர்கள் அவர்கள்.பல மொழிகளைக் கரைத்துக் குடித்து பாண்டித்யம் பெற்றவர்கள்.அப்படி இருந்தால் தான் அந்தக்காலத்தில் அவர்கள் புலவர்களாக இருக்க முடியும்.இன்றைக்கு போல் ஒரு மொழியை அரை குறையாக தெரிந்து கொண்டு பைஜாமாவைப் போட்டுக் கொண்டு தனது குரல் வளத்தால் மூக்கிலே மூச்சை மாற்றி ஏற்ற இறக்கத்தினுடன் பேசி விட்டால் கவிஞன் என்கிறோம்.ஆனால் புலவர்கள் அன்று அப்படியில்லை.அவர்களது வாழ்விலே லட்சுமி இல்லையென்றாலும் நாவிலே சரஸ்வதி இருப்பாள்.அவ்வளவு புலமை உடையவர்கள்.பல மொழிகளை கற்றரிந்தவர்கள்.அதனால்தானே மஹாபாரதத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் தமிழிலே வில்லிபாரதமாகவும் கம்பராமாயணமாகவும் நமக்கு தந்தார்கள். ஆக அவர்களெல்லாம் புலவர்கள் என்று போற்றப்பட்டார்கள்.

இன்றைக்கு இவர்கள் இவர்களாகவே தங்களுக்கு கவிஞர் பட்டம் சூட்டிக்கொள்ளுகிறார்கள். கவிப்பேரரசு என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் இண்ட்றைய கவிஞர்கள் மொத்த வியாபாரிகள்.அன்றைய புலவர்கள் தன்னை அடகு வைத்தாலும் தன் புலமையை அடகு வைக்காதவர்கள். அப்படிப்பட்ட ஒரு புலவர்தான் சத்திமுத்தப் புலவர். பாருங்களேன் இந்த புலவரது உண்மையான இயற்பெயர் முட தெரியவில்லை. இவரது உண்மையான பெயர் தெரியாததால் அவர் வசித்த ஊரின் பெயரிலேயே (சத்திமுற்றம்) இந்தப் புலவர் அறியப்படுகிறார். இன்றைய கவிஞர்கள் இப்படி இருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள்.
தூது அனுப்புதல் என்பது நடைமுறையின் பாற்பட்டது அல்ல. சொல்ல விரும்பும் ஒரு விசயத்தைக் கவிநயத்துடன் சொல்வதற்கான ஒரு கற்பனை வடிவமே இது. தலைவன் தலைவி என்ற பாத்திரங்களும் உருவகங்களாகவே அமைவதும் உண்டு. தூதுக்களில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப்பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமைகின்றன. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன. அதுமட்டுமல்ல விறலியைக் கூட தூது விட்டிருக்கிறார்கள்.விறலி என்றால் இளங்குமரி.

அந்த வரிசையில் சத்திமுத்த புலவர் தனது மனைவிக்கு தூது அனுப்பினார் நாரை மூலம்.இது அனைவருமே அறிந்த பாடல் தான்.அதன் சுவையும் கற்பனையும் அலாதி.

வறுமையில் வாடிய இந்த புலவர் பாண்டிய மன்னனைப்பார்த்து, அவனை வாழ்த்திப் பாடினால் ஏதாவது பரிசு கிடைக்கும் என்று நினைத்தார். இன்று போல போக்குவர்த்து இல்லாத காலம். சக்திமுற்றம் என்ற தன் ஊரில் இருந்து நடந்தே மதுரைக்கு வந்தார். ஆனால் பாண்டிய மன்னனைப் பார்க்க முயன்றும் முடியவில்லை.தனது நிலைமையை சொல்லியும் அரண்மனை வாயில்காப்போரிடம் இவரது புலமை செல்லுபடியாகவில்லை. மனம் சோர்ந்து வருத்தத்துடன் திரும்பிய புலவர் ஒரு சத்திரத்தில் தங்குகிறார். வானத்தைப் பார்த்து பெறு மூச்சு விடுகிறார். அப்போது வானத்தில் நாரைகள் பறந்து செல்கின்றன. வானத்தில் பறந்து செல்லும் நாரைகளைப் பார்த்து இப்படிப் பாடுகிறார்:

‘’நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே’’
(தனிப்பாடல்)

நாரையே, நாரையே,
சிவந்த கால்களைக் கொண்ட நாரையே,
நன்கு முற்றிய பனங்கிழங்கைப் போல் வாய் பிளந்த நாரையே,
கூர்மையான, பவளத்தைப் போல் சிவந்த அலகைக் கொண்ட நாரையே,
நீயும், உன் மனைவியும் தெற்கே உள்ள கன்னியாகுமரியில்
விளையாடி விட்டு வடக்கே சென்றால், என்னுடைய சத்திமுற்றத்துக்
குளத்தில் தங்குங்கள். அங்கே என் மனைவியைப் பார்த்து ஒரு செய்தி
சொல்லுங்கள்.
எங்கள் கூரை வீட்டின் சுவர் மழையில் நனைந்து சிதைந்திருக்கும்.
அங்கே ஓர் ஏழைப் பெண் சுவற்றுப் பல்லி ஏதாவது (சகுனம்) சொல்கிறதா
என்று (எதிர்பார்த்துக்கொண்டு ஏக்கத்துடன்) காத்திருப்பாள்.
(அவள்தான் என் மனைவி. அவளை நீங்கள் பார்த்தவுடன்)
‘எங்கள் தலைவனாகிய பாண்டியனின் ஊரில் கடுமையான வாடைக்காற்று,
குளிர், அதில் சரியான ஆடைகூட இல்லாமல் நடுநடுங்கியபடி கை கால்களால்
உடம்பைப் பொத்திக்கொண்டு, பெட்டியினுள் அடைக்கப்பட்ட பாம்பைப்போல்
மூச்சுவிடும் ஏழை ஒருவனைப் பார்த்தோம்’ என்று சேதி சொல்லிவிடுங்கள்.

இப்படி வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து தன்னுடைய நிலைமையையும் குடும்பத்தின் நிலைமையையும் எடுத்துக் கூறியதை, நகரசோதனைக்காக மாறு வேடத்தில் அவ்வழியே சென்ற பாண்டிய மன்னன் கேட்கிறான். இவர் மீது இரக்கம் கொண்டுதான்அணிந்திருந்த சால்வையை அவர் மீது போர்த்தி விட்டு சென்று விடுகிறான்.புலவனும் யாரோ தன் மீது பரிவு கொண்டு சால்வையை போர்த்தியதாக நினைத்து உறங்கி விடுகிறார். மறு நாள் அரண்மனை காவலாளிகள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு அதிசியக்கிறார்.தானோ ஒரு ஏழைப்புலவன்.எம்மை நோக்கி ஏன் வருகிறார்கள் என யோசித்த வேளை,காவலர் தலைவன், புலவரை வணங்கி,மன்னன் தங்களை (புலவரைத்) தேடிக் கண்டு பிடித்து, வருத்தாது கொண்டுவரும்படி ஆணையிட்டுள்ளார் எனக் கூறி அழைத்து சென்றனர். அவைக்குவந்த புலவரை அரசன் வெகுமதி பல அளித்துக் கௌரவித்தான் புலவர் அரசனை வணங்கி தன் வறுமையை போக்கியமைக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றார்.

சில காலம் கழித்துப் புலவர் இன்னொரு கவிதையின் மூலம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்:

‘’’வெறும்புற் கையும்அரி தாம்கிள்ளை சோருமென் வீட்டில் வரும்
எறும்புக்கும் ஆர்ப்பத மில்லை,முன் னாளென் இருங் கவியாம்
குறும்பைத் தவிர்த்தகுடி தாங்கியைச் சென்றுகூடியபின்
தெறும்புற் கொள்யானை கவனம் கொள்ளாமல் தெவிட்டியதே!!’’’

(பாண்டியமன்னன் பரிசு கொடுத்து ஆதரிப்பதற்கு முன், என் வீட்டில்வெறுஞ்சோறு பெறுவது கூட அரிதாகும். – கிளியும் பசிப்பிணியால்வாடி மிகவும் தளர்வினை அடையும்; வருகின்ற எறும்புகளுக்கும் ஆகாரம் கிடையாது – எனது பெரிய வறுமையாகிய சிறுமையினைப் போக்கிய மன்னனிடம் போய்ச் சேர்ந்த பின்னர், கொல்லும் செயலினை உடைத்தான புலியயையும் மிதித்துக் கொல்லா நின்ற யானையானது வாய் கொள்ளாமல் கரும்புக் கழிகளை உமிழ்ந்து சிதறியது என்பதாகும்.

என்னே அந்தக் கால புலவர்கள்! வறுமையில் வாடினாலும் வாடாத பாடல்களை வார்த்தவர்கள். அவர்கள் பாடல்கள் என்றென்றும் உயிர்த்திருக்கும்.

Advertisements

தமிழர்களின் கடவுள் முருகப் பெருமான்,திருமால்……….

July 12, 2015
ஆறு.தர்மபூபதி
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை ஐந்து வகையாக பிரித்துவிட்டார்கள். கண்களுக்கு எட்டிய தூரம் பரந்த சமவெளி நிலத்தையும் அந்த நிலத்தை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரமும் இருந்தால் அந்த பரந்த சமவெளி நிலத்தை மருத நிலம் என்றார்கள்.
கண்களுக்கு எட்டிய தூரம் சுற்றி சூழ்ந்திருக்கும் மலை பிரதேசத்தையும் அந்த மலையை நம்பி தங்களுடைய வாழ்வாதாரம் இருந்தால் அந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்றார்கள்.
இப்படியே மலை பிரதேசத்தை ஒட்டியிருக்கும் நிலத்தை முல்லை நிலம் என்றார்கள்.
பரந்து விரிந்த கடலையும் தங்களுடைய வாழ்வாதாரம் கடலை நம்பியிருப்பதால் அதை நெய்தல் நிலம் என்றார்கள்.
கோடை காலத்தில் முல்லை நிலம் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.
அப்படியே இந்த ஐந்துவகை நிலங்களுக்கும் தனித் தனியே கடவுளர்கள் உண்டு.
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. “சேயோன் மேய மைவரை உலகமும்” எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
குறிஞ்சி  நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: முருகன்
மக்கள்: குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி
மரங்கள்: வேங்கை, அகில், சந்தனம், மூங்கில்
விலங்குகள்: குரங்கு, கரடி
பறவை : கிளி, மயில்
பறை : தொண்டகம், வெறியாட்டு
பண்: குறிஞ்சி யாழ்
மலர்கள்: குறிஞ்சி, காந்தள்
தொழில்: கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல்
நீர் நிலை : அருவி, சுனை
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை     மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. ” மாயோன் மேய காடுறை உலகமும்” எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: திருமால்
மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
உணவு: வரகு, சாமை
பறவைகள்: காட்டுக் கோழி
விலங்குகள்: மான், முயல், பசு, மரை
நீர் நிலை : காட்டாறு
மரங்கள்: கொய்யா, காயா, குருத்து
மலர்கள்: முல்லை, பிடா,தொன்றி
பண்: பறை, முல்லை யாழ்
பறை : ஏறுகோள்
தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல்
ஊர்: பாடி,சேரி
மருதம், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.
மருத நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: இந்திரன்
மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
பறவைகள்: நாரை, குருகு, தாரா, அன்றில்
விலங்குகள்: எருமை, நீர்நாய்
மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
மரங்கள்: காஞ்சி, மருதம்
உணவு: செந்நெல், வெண்நெல்
பண்: மருத யாழ்
பறை : நெல்லரி
தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
நீர் நிலை : பொய்கை, ஆறு
நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். “வருணன் மேய பெருமணல் உலகமும்” எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது. நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்
பறவைகள்: கடற்காகம்
விலங்குகள்: சுறா
மரங்கள்: கண்டல், புன்னை, ஞாழல்
மலர்கள்: நெய்தல், தாழை, கடம்பு
பண்: மீன்கோட் பறை, விளரி யாழ்
தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்
உணவு : மீன்
நீர் நிலை : கேணி, கடல்
பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.
பாலை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: கொற்றவை
மக்கள்: விடலை, காளை, மறவர், மறத்தியர்
பறவைகள்: பருந்து, கழுகு
மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
மலர்கள்: மராம்பு
பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
பறை : ஆறலை, சூறைகோள்
தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
நீர்: கிணறு
விலங்கு: வலியிலந்த புலி
யாழ்: பாலையாழ்
ஊர்: குறும்பு 
இப்படி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழர்களின் தெய்வமாக           வழிபாட்டு வந்துள்ளனர். இவை சங்க கால இலக்கியங்களிலும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. ஆனால் இன்றைய ஹிந்து மத எதிர்ப்பாளர்களான வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் தமிழன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு தமிழர்களின் பண்பாட்டை சிதைக்க முயலுகின்றனர். இவர்களின் உருவாக்கம் தான் திராவிடக் கட்சிகளும் ராமசாமி நாயக்கரும். ஆகவே போலியான தமிழ் பேசுவோரை புறம் தள்ளி ஒதுக்க வேண்டும்.