Archive for the ‘பண்பாடு’ Category

மணிமேகலையும் ஊழ்வினையும்…..

July 11, 2017

தர்மபூபதி ஆறுமுகம்

சங்க கால இலக்கியங்களில் மறுபிறவி குறித்தும் ஊழ்வினைகளால் மறுபிறவியில் எவ்வாறு பிறப்பெடுக்கிறார்கள் என்பதும் இலக்கியங்களின் மைய கருத்தாக இருந்து வந்திருக்கிறது.அந்த வகையில் சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் முக்கியமானவையாகும்.சிலப்பதிகாரத்தை தொடர்ந்து உருவான  இலக்கியம் மணிமேகலையாகும்.சிலப்பதிகார காவிய நாயகிகள் இருவர்.கண்ணகி,மாதவி.அந்த மாதவியின் மகள் தான் மணிமேகலை – இலக்கியத்தின் நாயகி. இந்த மணிமேகலை என்ற காவிய பாத்திரத்தைச் சுற்றி ஆதிரை,காய கண்டிகை,உதயணன் என்ற பாத்திரங்கள் உலாவருகிறது.அந்த அற்புதமான கதாபாத்திரங்களின் காவிய வரலாற்றையும் ஊழ்வினையின் செயல்பாட்டினையும் அற்புதமாக தந்திருக்கிறார் சீத்தலை சாத்தனார்.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலனின் மனைவி கண்ணகி. கோவலனின் காதலி கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவி. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் “மணி மேகலை”. மரக்கலம் உடைந்து, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தன் முன்னோர்களில் ஒருவனைக் காப்பாற்றிக் கரைசேர்த்தது “மணி மேகலா தெய்வம்”, அந்த தெய்வத்தின் மீது உள்ள பக்தியின் காரணமாகத் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு “மணிமேகலை” எனப் பெயர் சூட்டினான் கோவலன். கடலில் பயணம் மேற்கொள்ளும் நல்லோருக்கு இடுக்கண் வருமாயின் அவர்களின் துயரைத் தீர்க்கும் கடற்காவல் தெய்வத்தாய் “மணிமேகலா தெய்வம்” ஆகும்.

பொருள் ஈட்டுவதற்காக மதுரை சென்ற கோவலன்,  பாண்டிய அரசியின் சிலம்பு ஒன்றினைத் திருடிய கள்வன் என்று பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்படுகிறான். அதனை அறிந்த மாதவி தன் பொருட்களை எல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர்த் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள்.கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள். தன் பெண்ணான மணிமேகலையையும் துறவறத்தில் ஈடுபடுத்துகிறாள்.

வழக்கம்போல பூம்புகாரில் இந்திராவிழா நடைபெறுகிறது.இந்திரவிழாவில் நாடக மடந்தையரின் ஆடலும் பாடலும் முதன்மையானவை.ஆனால் அந்த ஆண்டு மாதவியும் மணிமேகலையும் பங்கேற்காத விழாவாக இந்திர விழா நடைபெறுகிறது. இதனால் ஊர் மக்கள் அவர்களைப் பற்றிப் பழி பேசுகின்றனர்.  ஊர் பழிக்கவே,  மாதவியின் தாயான சித்ராபதி,மாதவியின் தோழி வயந்தமாலையை அழைத்து ஊர்ப் பழியைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள். ஊர்பழியைத் தீர்க்க வயந்தமாலை மாதவி மணிமேகலை இருவரையும் இந்திர விழாவிற்கு வருமாறு வேண்டுகிறாள்.ஆனால் மாதவி தான் கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் விளக்கிக் கூறுகிறாள்.இனிமேற்கொண்டு எந்த ஆடல்பாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும், இனி தங்களது வாழ்வு புதிய பாதையில் செல்லப் போவதையும் மாதவி உறுதிபடக் கூறுகிறாள்

காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை …
(ஊர் அலர் உரைத்த காதை, 54-57)

என்றும் உரைக்கிறாள். மணிமேகலையை ‘மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்’ என்று சொல்வதன் மூலம் மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையைத் தெளிவாக உணர்த்திவிடுகிறாள்.

கோவலன்,  கண்ணகி,  மாதவி ஆகிய மூவருக்கும் ஏற்பட்ட துன்பங்களை மாதவி வயந்தமாலையிடம் கூறியதைக் கேட்டு, துறவறத்தில் மூழ்கி புதுப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்ட மணிமேகலையின் கண்களில் ஆறாகப் பெருக்கெடுக்கிறது.புத்தபெருமானுக்கு பூமாலை கட்டிக்கொண்டிருந்த மணிமேகலையின் கண்கள் ஆறாகப் பெருக்கெடுத்து கட்டிய பூமாலைகள் மீது விழுந்து நனைக்கிறது.இதைக் கண்ணுற்ற மாதவி,வேறு பூக்களை பறித்து மாலை தொடுக்குமாறு கூறுகிறாள். மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் சோலைக்குச் செல்கின்றனர்.

மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான்.   உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.தனது நெஞ்சம் ஏன் இப்படித் தடுமாறுகிறது என்பதை தோழியிடம் கூறுகிறாள்.அதை மாற்ற வேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். அப்போது இந்திர விழாவினைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்துகொள்கிறது.    எனவே மணிமேகலையையும் சுதமதியையும் உதயகுமரனிடமிருந்து தப்புவிக்க அவர்களைச் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுமாறு கூறுகிறது. மேலும் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாற்றையும் கூறுகிறது. இதற்குள் இரவுப் பொழுதாகிறது. சுதமதி அங்கேயே உறங்கிவிடுகிறாள். உறங்க ஆரம்பித்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து முப்பது யோசனைத் தூரம் வான் வழியாக எடுத்துச் சென்று மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்துவிட்டுச் செல்கிறது.

மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள் முன் புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனமான புத்த தரும பீடிகை தோன்றுகிறது. அதைக் காண்போருக்கு அவர்களுடைய பழம்பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள்.  அதன் மூலம் தன் பழம்பிறப்பை உணர்கிறாள்.

முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்தாள் மணிமேகலை. செல்வச்செழிப்புடனும் வனப்புடனும் வளர்ந்த லக்குமி தனது மனதுக்குப் பிடித்த ராகுலனை திருமணம் செய்து கொள்கிறாள்.இனிமையான இல்லறம் தொடர்கிறது.ஆனால் காலன் பாம்புருவில் வந்து ராகுலனை தீண்டி,எம உலகிற்கு அழைத்து செல்கிறான்.தனது பாசக் கணவனின் உடல் தீயிட்டு கொளுத்தப்படும்போது அந்த சிதையில் தானும் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள் லக்குமி.இவ்வாறு தனது முற்பிறவியின் ரகசியங்களை அறிந்து கொள்கிறாள் மாதவி.அந்த ராகுலன் தான் இந்த பிறவியில் உதயணன் என்பதையும் அதனாலேயே தன் நெஞ்சம் அவனை நாடுகிறது என்பதையும் புரிந்து கொள்கிறாள் மணிமேகலை. இவைகளையெல்லாம் மணிமேகலைக்கு புரியவைத்த மணிமேகலா தெய்வம்,  மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழியாகச் சென்று வர உதவும் மந்திரத்தையும்,  பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது.

மணிமேகலை அங்குள்ள கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளையும் மாதவியையும் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள். மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள், கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள்.

புகார் நகரம் வணிகர்களுக்கும் வணிகத்திற்கும் பெயர் போனது.செல்வ செழிப்போடு வாழ்ந்த வணிகர்கள் சிலர் அவ்வப்போது கணிகையர்களோடு சிலகாலம் வாழ்வதும்,பிறகு ஈட்டிய பொருட்களை தொலைத்து மீள்வதும் வாடிக்கையான ஒன்று.அப்படிப்பட்ட வணிகர்களில் சாதுவான் என்பவரும் ஒருவர்.

ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது.  சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர்.  சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர்.  அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள்.  தீயில் குதித்தாள்.  ஆனால் தீ அவளைச் சுடவில்லை.  ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’  என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர்.  சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான்.  நல்லறிவு பெற்ற நாகர் தலைவன்,  சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான்.  அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான்.  ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

ஆதிரையின் வரலாற்றைக் கூறி கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு காயசண்டிகை கூற,  மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள்.  ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே!  என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தனக்கு தீராப்பசி ஏற்படக்காரணமான சாபத்தை மணிமேகலையிடம் கூறுகிறாள்.

“வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்துவிட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர்.   நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன்.  இதை நீ சிதைத்தாய்.  ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாக’ எனச் சபித்தான்.  முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசி தீர்ந்தேன்” என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.

மணிமேகலை,உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான்.

காயசண்டிகையை சந்திக்க வந்த அவள் கணவன் காஞ்சனன், மாற்று உருவில் இருக்கும் மணிமேகலையை தனது மனைவி எனத் தவறாக எண்ணி,தகாது நடக்கும் உதயணனை தனது வாளால் வெட்டிக் கொல்கிறான்.அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு,நடந்த உண்மைகளை சொல்கிறது. அதுமட்டுமல்லாது காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள்.  ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள்.  மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள்.  காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள்.  பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள்.  அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள்.  அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள்.  அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான்.  அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம்,  கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது,  மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது.  உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது.  மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து,   அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி,  பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள்.  அவள் மனம் அமைதி பெறவில்லை.  அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள்.  அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள்.  அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர் மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள்.

முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’  என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள்.மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

Advertisements

ரகுவம்சம்

January 3, 2016
ஆறு.தர்மபூபதி
வசிஷ்டர் தியானத்திலிருந்து கண் விழித்து பார்த்த போது மாமன்னன் திலீபன் தன் எதிரே நிற்பதைக் கண்டு அதிசியத்துப் போனார்.
“என்ன திலீபா? இந்த இளம் காலை நேரத்தில், அதுவும் உன் துணைவியாரோடு………”,
“குரு பெருமானே……என்னை ஒரு கவலை வாட்டி எடுக்கிறது. இரவு நேரங்களில் அந்த கவலை எங்களுடைய தூக்கத்தை துக்கமாக மாற்றுகிறது. நேற்று இரவு இந்தக் கவலையால் சிறிது நேரம் கூட தூங்கவில்லை…. அதனால் தான் நானும் எனது மகாராணியாரும் தங்களிடம் குருவருள் வேண்டி தங்கள் முன் நிற்கிறோம்” என்றவாரே திலீபனும் அவனது மனைவியும் வசிஷ்ட முனிவரின் திருப் பாதங்களை தொட்டு வணங்கினர்.
Magna-tech
விவச்சுவான் என்னும் மன்னன் ஆதித்தனுடைய புத்திரன். சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான். அவனுடைய மகன் அரசர்களுக்கெல்லாம் அரசன் எனப் போற்றப்பட்ட, வைவச்சுதன் என்பவன் மரபிலே வந்தவன் திலீபன். விசாலமான மார்புடையவன். எருதின் கழுத்தைப் போன்று கழுத்துடையவன். எப்பேர்ப்பட்ட வீரர்களையும் எதிர்கொள்ளும் பலம் பொருந்தியவன். பெரும் விலங்குகளினும் பலம் கொண்டவன். மராமரம் போன்ற உன்னத புருஷன். சாத்திரங்களின்படி வாழுபவன், தர்மத்தின் படி ஆட்சி புரிபவன், பகைவர்களாயினும் நல்லோரை நட்பு பாராட்டுபவன். உறவினராயினும் தீயோராக இருந்தால் புறம் தள்ளி வைப்பவன், எடுத்த காரியத்தை முடிப்பதில் மிக்கவன் மொத்தத்தில் பாற்கடலில் சந்திரன் போன்று வந்துதித்தவன் இந்த திலீபன். இவனுக்கு மகதராசன் புதல்வி சுதாகினை என்பவள் பத்தினியாக வாய்க்கப் பெற்றாள். தனது ஆசிகளை வழங்கி விருந்தோம்பிய பின்னர் மாமுனிவர் அரசனது துக்கம் குறித்து வினவினார்.
“சுவாமி, தங்களது அருட்பார்வையாலே எனக்கு எல்லா இடையூறுகளும் நீங்குகின்றன. தங்களது மந்திர வலிமையாலே பகையெல்லாம் பஞ்சாகப் பறக்கின்றன. மனிதர்களால் வரும் களவு போன்ற எந்த பயமுமில்லை. தேவர்களால் வரும் பஞ்சம் போன்ற எந்த பயமும் இல்லை. வேத மந்திரங்கள் பொழியும் ஹோம குண்டத்தில் தாங்கள் வார்க்கும் நெய் தானே மீண்டும் மழையாகப் பெய்து பயிர்களை வளர்க்கிறது. வேத தர்ம சாஸ்திரங்களை கடைபிடித்து அதன்படி நடக்கும் தங்களின் அனுகிரகத்தாலே ராஜ்யத்தில் அனைத்து மக்களும் மகிழ்வாக இருக்கின்றனர். இவையெல்லாம் இருந்து என்ன பயன்? எனக்கு ஒரு மகவு இல்லையே! எனக்கு ஒரு செல்வன் இல்லாததால் இந்த உலகமும் என்னை இகழ்கிறது. நான் செய்யும் தான தர்மங்கள் எனக்குப் பிறகு தொடர்வதற்கு யார் இருக்கிறார்கள்? நான் எங்கள் மூதாதையருக்கு செய்யும் பித்ரு கடன்களை எனக்கு பின் தொடர்வதற்கு யாரும் இல்லையென்று மேலுலகில் உள்ள என் பித்ருக்கள் நான் வழங்கும் பிண்டத்தை சரியாக உண்பதில்லை. நான் வழங்கும் தர்ப்பண நீரையும் இனிக் கொடுப்பவரில்லையே என்று பெருமூச்சு விட்டு அதனால் எழும் சூட்டினாலே சூடு அதிகமாகி அருந்துகின்றனர். தவமும் தானமும் போல இறப்புக்குப் பின்னர் ஏற்படும் மறுமை சுகமும் கெடாமல் இம்மைக்கும் மறுமைக்கும் சுகத்தைக் கொடுக்கின்ற புத்திரப் பேறு இல்லாத என்னை உன்முன்னே நிற்கும் காயா மரமாக பாருங்கள் குருவே. பித்ரு கடன்களை தொடராத நிலைக்கு என்னை ஆட்படுத்தி விடாதீர்கள். இக்குவாகுவின் குலத்தார்க்கு அனைத்து அருட்பேருகளையும் அருளுவதற்கு தங்களை விட்டால் யாருளர்? குருவே அருள் புரியும்”, என்று திலீபனும் அவனது மனைவியும் வசிஷ்ட முனிவரின் பாதங்களில் வீழ்ந்து விண்ணப்பித்தனர்.
imageவசிஷ்ட முனிவர் அவர்களை ஆசுவாசப்படுத்தி திலீபனுக்கு புத்திர பாக்கியம் ஏற்படாத காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு மீண்டும் தியான சமாதி நிலைக்கு சென்றார். சிறிது நேர தியானத்திற்குப் பிறகு அதன் காரணத்தை அறிந்து கொண்ட வசிஷ்ட மாமுனிவர், அரசனே முன்பொரு நாள் தேவருலகம் சென்று இந்திரனைக் கண்டு வரும்போழுது வாயிலில் கற்பக மரத்தடியில் காமதேனு படுத்திருந்தது. ஆனால் நீயோ காமதேனுவிற்கு வந்தனை செய்யாமல் உனது மனைவியின் ருது காலத்தையும் புத்திர உற்பத்தியையும் நினைவிற் கொண்டு, மனைவி மீது ஆவல் கொண்டு விரைவாக வந்தாய். அதனால் சினம் கொண்ட காமதேனு,” சந்ததி கருதி என்னை வந்தனை செய்யாமல் இகழ்ந்து செல்கின்றாய். என்னை வந்தனை செய்யாமல் உனக்கு சந்ததி கிடையாது என்று காமதேனு சாபமிட்டது. அந்த சாபமும் உனது திக்கி யானை தேவ கங்கையில் விளையாடிய ஆர்ப்பரிப்பு சப்தத்தாலே உனக்கு கேட்கவில்லை. உனது தேர்ப் பாகனுக்கும் கேட்டிலது. வந்தனை செய்ய வேண்டிய ஒன்றை வந்தனை செய்யாமல் வாளாவிருப்பது பெரிய நிந்தையாகும். அதனால் நன்மைகள் கிடைக்கத் தடையாகும். அந்த காமதேனுவும் இப்போது இங்கில்லை. பாதாளத்தில் வர்ணபக்வான் நடத்தும் தீர்க்க சத்திர யாகத்தில் அவிர்பாகம் பெரும் பொருட்டு அங்கு சென்றுள்ளது. இங்கே அதன் கன்று இருக்கின்றது. அதன் திரு நாமம் நந்தினி. அந்த காமதேனுவின் புதல்வியை மனதார தூய பக்தியோடு வழிபடு. காமதேனுவின் மனம் குளிரும்போது உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்”, இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தினி அங்கு வந்தது. நந்தினியின் வருகையைக் கண்ட மாமுனிவர்,” நந்தினி வருகை நல்ல சகுனத்தைக் காட்டுகிறது. ஆகவே உனது காரியம் எளிதாக முடியும் என்பதையே இது காட்டுகிறது “, என்றார்.
“அரசனே நீ தூய்மையாக இந்த இல்லை காய் கனி ஆகிய வன பதார்த்தங்களை உண்டு விரதம் பூண்டு இந்த நந்தினியை வழிபாடு செய். இந்த நந்தினி விடியற்காலை காட்டிற்கு மேய்ச்சலுக்குப் போகும்போது உடன் நீயும் போக வேண்டும். இது நின்றால் நீயும் நிற்க வேண்டும். அது கிடந்தால் நீயும் கிடக்க வேண்டும். நீர் குடித்தால் நீயும் குடிக்கலாம். உனது பத்தினியும் விடியற் காலையில் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு நந்தினியை வழிபட்டு ஆசிரம எல்லை வரை சென்று காட்டிலே மேய விட்டு வரவேண்டும். அதே போன்று சாயங்காலம் நந்தினி மேய்ச்சல் முடிந்து வரும்போழுது, ஆசிரம எல்லையில் நின்று அதை வழிபாடு செய்து அழைத்து வரவேண்டும். நந்தினி அருள் கிடைக்கும் வரை நீயும் உனது மனைவியும் தூய பக்தியோடு இந்த காரியத்தில் ஈடுபடுங்கள். எந்த தீங்கும் இல்லாதவனாகுக. உங்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகுவதாக,” என்று வாழ்த்தி பத்தினியையும் அரசனையும் பர்ணசாலையில் கொண்டு சென்று அவர்களுக்கு உண்ண இலை காய் கனி ஆகியவற்றை வழங்கினார்.
Picture1விடியற்காலையில் ராஜ பத்தினி எழுந்து நந்தினியை வழிபாடு செய்து வணங்கினாள். அகமகிழ்ந்த நந்தினி தன் கன்றுகுட்டிக்கு பால் தந்து விட்டு நிற்க, அரசன் நந்தினியை கட்டவிழ்த்து விட்டு பாதுகாப் காப்பிற்காக, வில்லை எடுத்துக் கொண்டு மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றான். பத்தினியும் எல்லைவரை சென்று வழியனுப்பினாள். அரசன் நந்தினியை தனது கண்காணிப்பில் வைத்துக் கொண்டான். நந்தினி நிற்கும் போது இவனும் நின்றான். அது தண்ணீர் குடிக்கும்போது இவனும் குடித்தான். நந்தினி படுக்கும் போது இவனும் தரையில் படுத்துக் கிடந்தான். அதற்கு அப்போது புல்லுக்கட்டினை நீட்டி உணவருந்த செய்தான். இப்படி நந்தினியின் நிழல் போல வாழ்ந்தான். அவனது ராஜ பத்தினியும் நந்தினியை தெய்வமாக போற்றி வழிபட்டாள். மேய்ச்சல் முடிந்து மாலை வேலைகளில் நந்தினியை அழைத்து வரும்போது, அவன் ராஜபத்தினியும் ஆசிரம எல்லை வரை சென்று வழிபட்டு அழைத்து வருவாள். இருவரின் உபசரித்தலை ஏற்றுக் கொண்ட நந்தினியும் மேய்ச்சலை முடித்து வசிட்டரின் ஆச்ரமத்தையடுத்த யாக சாலையை நோக்கி வந்தது. அரசனும் பாதுகாப்பாக வர அதன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. நந்தினியை விட்டு விட்டு வசிஷ்ட முனிவரை சென்று பார்த்து வணங்கி மீண்டும் நந்தினி இருப்பிடத்திற்கு வந்தனர். பால் கரந்த பின் நந்தினியும் நித்திரை செய்தது. அன்றைய நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு அரசனும் பர்ணசாலையில் அங்கேயே நித்திரை செய்தான். ராஜபத்தினியும் விளக்கேற்றி வைத்து நந்தினியை வழிபட்டு அரசன் அருகே சென்று படுத்து நித்திரை செய்தாள். பின்னர் விடியக் காலம் வந்தது. நந்தினி எழுந்தாள். உடன் அரசனும் ராஜபத்தினியும் எழுந்தார்கள். முந்தைய நாள் போலவே நந்தினியை வணங்கி அன்றைய நாளைக் கழித்தனர்.இப்படியே இருபத்திரண்டு நாட்கள் கழிந்தன.
இருபத்திரண்டாம் நாள்.அரசானது அன்பை சோதிக்க நந்தினி எண்ணியது. மேய்ச்சலுக்கு வழக்கம் போல சென்ற நந்தினி மெல்லமெல்ல இளம் புற்களை மேய்ந்தவாரே அந்த இமயமலை அடிவாரத்தில் உள்ள குகையை அடைந்தது. அரசனும் நந்தினியை யார் என்ன செய்துவிடமுடியும் என்ற எண்ணத்தில் தனது பார்வையை நந்தினியிடமிருந்து எடுத்து அந்த மலைச்சாரலின் அழகை ரசித்தவாறு இருந்தான். திடீரென்று நந்தினியின் அலறலைக் கேட்ட அரசன் தனது பார்வையை திருப்பினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய செய்தது. ஒரு சிங்கம் நந்தினியின் கழுத்தை கவ்வியபடி குதறத் தொடங்கியது. அரசன் தனது வில்லைத் தொடுக்க இடது கையை முன்னெடுத்து செல்ல, அவனது வலக்கை,பின் உள்ள அம்பு கூட்டிற்கு சென்றாலும் தனது கைகள் ஸ்தம்பித்ததைப் பார்த்து அரசன் செய்வதறியாது நின்றான். அப்போது அந்த சிங்கம் அரசனைப் பார்த்து சொல்லிற்று:
“அரசனே…. நான் சொல்வதைக்கேள். உன்னுடைய அம்பு என்னை ஒன்றும் செய்யாது. வலிமையான தெய்வமே வந்து என்னுடன் போர் புரியினும் வெற்றி எமக்கே. மரங்களை அடித்து வேரோடு பிடுங்கும் வாயு பகவானால் மலைகளை என்ன செய்து விட முடியும்? நான் சிங்கமல்ல, சிவபெருமானுக்கு சேவை செய்யும் கும்போதரன் என்னும் பூதங்களின் தலைவன். இங்கே நிற்கும் வானுயர்ந்த தேவதாரு மரத்தைப் பார். அன்னை உமாதேவியார் நீரூற்றி வளர்த்த மரம். காட்டு யானைகள் தங்கள் உடம்பின் அரிப்பை போக்க இந்த மரத்தின் மீது தனது உடம்பை தேய்த்து மரத்தை காயப்படுத்தியதைக் கண்ட தேவியார் கவலை கொண்டார். இதனை அறிந்த சிவபிரான், இந்த குகை அருகே சிங்க உருக்கொண்டு, வரும் பிராணிகளை உணவாகக் கொண்டு இந்த மரத்தை காவல் புரிவாயாக என கட்டளையிட்டுள்ளார். ஒரு காத தூரத்திற்கு எந்த பிராணியும் வருவதில்லை. அன்று தொடங்கி இன்றுவரை எனக்கு எந்த பிராணியும் கிட்டவில்லை. நான் பெரும் பசியுடன் இருக்கிறேன். நான் செய்த நல்வினையால் இந்தப் பசு எனக்கு இரையாக வந்துள்ளது. இன்று இதை உண்டு எனது பசியைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். உனது குருவின் பொருளை உன்னால் காப்பாற்ற முடியாது. உனது காவலிலும் தவறில்லை. பசுவைக் காக்க வேண்டும் என்ற உனது என்னத்தை மாற்றிக் கொள். தேவையில்லாமல் உன்னை வருத்திக் கொள்ளாதே….”என்றது சிங்கம்.
“சிங்கமே….தோல்வியடைந்த நான் சொல்வதையும் கொஞ்சம் கேள். நான் சொல்கிற வார்த்தைகளை ஏளனமாக பார்க்காதே….. என்னை உணவாகக் கொள். உன்னுடைய பசியைத் தீர்த்துக் கொள். சிவபிரானது கட்டளைக்கும் பங்கமில்லை. அந்த பசுவும் நீண்டு வாழும். மாலைக் காலத்தில் தனது மாதா வந்து பால் கொடுக்கும் என்று ஆசையுடன் இருக்கும் கன்று குட்டிக்கும் பங்கம் வராது. வசிட்ட முனிவரின் யாகத்திற்கு கிடைக்கும் பாலிற்கும் தடையிருக்காது. ஆகவே என்னை உண்டு பசியை போக்கிக் கொள். அந்த பசுவை விட்டு விடு” இதைக்கேட்ட சிங்கம் நகைத்தது.
“மன்னனே…. உன்னைப் பார்த்தால் இளமையும் வேகமும் அறிவும் அரசியலும் ஒரு சேரப் பெற்றவனாய் இருக்கிறாய். அற்பப் பசுவிற்க்காக இத்தனை சிறப்புக்களையும் இழந்து விடாதே. எதை செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று அறியாத மூடனாக இருக்கிறாய். நீ இறந்தால் இந்தப் பசு மட்டுமே உய்விக்கும். உன்னை நம்பியிருக்கும் நாட்டு மக்கள் கவலையில் மூழ்குவர், இன்னல் படுவர். ஆதலால் நீ இறவாமல் நின்று உயிர்களை காப்பாயாக. பசுவை கொல்லவிட்டதற்க்காக வசிட்டர் கோபமடைந்தால் ஆயிரம் பசுக்களை அவருக்கு தானமளித்து கோபத்தை தணிப்பாயாக….”என சிங்கம் சொல்லிற்று.
இதைக் கேட்ட அரசன்,”நான் சத்திரியன்.தனது உயிரைக் கொடுத்தாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் இனத்தைக் கொண்டவன். தனது கடமையை செய்யாத சத்திரியனான என்னைப் போன்ற அரசனால் அரசிற்கு என்ன பயன்? ஆயிரம் பசுக்களை வசிட்டருக்கு கொடுத்தாலும் அவரது கோபம் தணியாது. தனது மாதா வந்து பால் கொடுப்பாள் என்று காத்திருக்கும் இளங்கன்றின் துயரத்தை எப்படி என்னால் தாங்க முடியும்? குருவின் யாகமும் பாலின்றி பழுதாகும்.பசுவைக் காக்கும்படி பணித்த குருவின் முன்னால் பசுவை இழந்த பிறகு அவர் முன்னால் எப்படி நிற்பேன்?எனது இந்த உடம்பை அழிந்து போவது உனக்கு விருப்பமில்லை என்றால் எனது புகழுடம்பு மட்டும் எப்படி நிலைக்கும்? சிங்கமே….. இவ்வளவு நேரம் நாம் பேசி இப்போது நண்பர்களாகி விட்டோம். நண்பனின் வேண்டுகோளை மறுப்பது நீதியன்று என்றான் அரசன்.
image
“அப்படியே ஆகுக”,என்று சிங்கம் நந்தினியை விடுவித்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் தனது அம்பை கீழே வைத்துவிட்டு சிங்கத்தின் முன்னர் படுத்தான். அப்போது பூமாரி பொழிந்தது. திடுக்கிட்டு தலையைத் தூக்கிப் பார்த்தான். அங்கே சிங்கம் காணப்படவில்லை. நந்தினிதான் நின்றது. “அரசனே நான் தான் உன்னை சோதிக்க விரும்பினேன். யாரும் எந்த பிராணியும் என்னை ஒன்றும் செய்து விட முடியாது. வசிட்டருடைய அனுகிரகத்தாலே, எமனே வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அப்படியிருக்கையில் சிங்கம், மற்ற பிராணிகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. உன்னுடைய குரு பக்தி என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. நான் வெறும் பசு மட்டுமல்ல. நினைத்ததைக் கொடுப்பவள். எனது இன்னொரு பெயர் காமதேனு. உன்னுடைய செயலால் நான் மகிழ்வடைந்தேன். உனக்கு என்ன வேண்டும் கேள்”, என்றது நந்தினி.
அரசன் “தாயே எனக்கு சந்ததி இல்லாமல் நான் வருந்துகிறேன். ஆகவே எனக்கு ஒரு ஆண் மகன் பிறக்க வரம் தர வேண்டும்”, என்றான் அரசன். “அப்படியே ஆகட்டும்.என்னுடைய பாலை தொன்னையிலே கறந்து நீ குடிக்க வேண்டும்.உனக்கு ஆண் மகன் பிறப்பான்”,என்று வரம் அளித்தாள் நந்தினி. இதைக் கேட்டு மகிழ்ந்த அரசன் திலீபன்,”தாயே,கன்று குடித்தது போக, முனிவரின் யாகத்துக்குத் தேவையான பால் நீங்கலாக மீதமுள்ள பாலை வசிட்ட முனிவரின் ஆசி பெற்று உண்ண விரும்புகிறேன்,” என்றான் திலீபன். நந்தினி அகமகிழ்ந்து ஆமோதித்து, வசிட்டருடைய பர்ணசாலை நோக்கி புறப்பட்டது. அரசனும் பாதுகாப்போடு நந்தினியை அழைத்து வந்தான்.அரசனுடைய ராஜ பத்தினியும் எல்லை வந்து வணங்கி பூஜை செய்து நந்தினியை பர்ணசாலைக்கு அழைத்து சென்றாள்.
வசிட்டமுனிவர் மன்னன் திலீபனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி நின்றான். மன்னன் முகத்தைப் பார்த்து குறிப்பறிந்து நந்தினியின் வரத்தை அறிந்து கொண்டு மன்னனை நோக்கினான். மன்னன் திலீபன் அங்கு நடந்தவைகளை முனிவருக்கும் தனது ராஜபத்தினிக்கும் விவரித்தான். முனிவர் ஆசி கூறவே, திலீபன் நந்தினியின் கன்று பால் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து, யாகத்திற்கு தேவையான பாலை கறந்த பின் ஒரு தொன்னையில் நந்தினியிடம் பாலை கறந்து வசிட்ட முனிவரையும் நந்தினியையும் வணங்கி பாலைக் குடித்தான். அன்றிரவு அரசன் திலீபனும் அவனது ராஜபத்தினியும் அங்கேயே படுத்துறங்கினார்கள். அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு, அருந்ததியிடமும், வசிட்ட முனிவரிடமும் ஆசி பெற்று பின் நந்தினியை வணங்கி விடைபெற்றனர். தனது நகரை வந்தடைந்த அரசனையும் அரசியையும் மக்களும் மந்திரிகளும் வரவேற்று அரண்மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மந்திரிகள் தங்கள் வசமிருந்த ஆட்சிப் பொறுப்பை அரசன் திலீபனிடம் வழங்கினார்கள். ராஜ பத்தினி கர்ப்பவதியானாள். பத்துமாதங் கழித்து அழகிய ஆண்மகவைப் பெற்றாள் அரசி. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மங்கள வாத்தியங்கள் எங்கும் முழங்கின. மக்கள் குதுகலிக்க நகரமே விழாக்கோலம் பூண்டது. தனது குழந்தைக்கு ரகு என பெயரிட்டான் திலீபன். மக்களுக்கு தான தர்மங்களை வாரி வழங்கினான்.                             (தொடரும்)
(திலீபன் என்ற மாமன்னனுக்கு மகனாகப் பிறந்த ரகு என்ற சக்ரவர்த்தியின் மரபில் வழி வந்த மாமன்னர்களின் சரித்திரத்தை மகாகவி காளிதாசர், ரகுவம்சம் என்ற பெயரில் காவியமாகப் படைத்திருக்கிறார். அந்த காப்பியத்தின் கருதான் இந்த கதை) (more…)

ஆங்கிலப் புத்தாண்டு – எப்போ திருந்து வாங்க?

December 29, 2015

ஆறு.தர்மபூபதி

பல ஆண்டுகள் இருக்கும்…….
ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளில்,ஹிந்துக் கோவில்கள் வழிபாட்டிற்கு நள்ளிரவு கூட திறந்திருந்த நேரம்……. (பிற்காலத்தில் பலத்த எதிர்ப்பின் காரணமாக நள்ளிரவு கோவில் திறப்பது நிறுத்தப்பட்டது என்பது வேறு விசயம்)
அன்று ஆங்கிலப் புத்தாண்டு ……
அப்போது நான் அரசுப்பணியில் இருந்தேன். எனது உயர் அதிகாரி ஒருவர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்தில் தங்கியிருந்தார்.அவர் தங்கியிருந்த இடம் வாகன வசதி இருந்தால் மட்டுமே செல்லக் கூடிய இடம். பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து சொல்வது எழுதி வைக்கப்படாத சட்டமாக இருந்தது. ஆனால் இந்த உயர் அதிகாரி யாரும் எளிதாக நெருங்க முடியாத இடத்தில் அன்று தங்கியிருந்தது ஆச்சர்யத்தை தந்தது. நான் அருகாமையில் இருந்ததால் அவருடைய தேவைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இருந்ததால் நான் அவரை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது.
அன்று காலை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாள். நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது அவரது அறையில் இன்னொரு விருந்தினர் வந்ததைக் காண முடிந்தது.ஆனால் அந்த விருந்தினரை சொற்களால் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார் எங்கள் உயர் அதிகாரி. “இந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவையில்லை என்பதால் தான் நான் இவ்வளவு தூரம் வந்து தங்கியிருக்கிறேன்.ஆனால் விடாமல் என்னை இங்கு வந்து பார்த்து புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லுகிறீர்கள். நீங்களெல்லாம் படித்தவர்கள் தானே….உங்களுக்கு கொஞ்சமாவது புத்தி உள்ளதா? நான் கிறிஸ்தவன் அல்ல,நீங்களும் கிறிஸ்தவன் அல்ல.எதற்கு இந்த வாழ்த்து….. இந்த புத்தாண்டுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தமுண்டா?அலுவலக ரீதியிலாவது இந்த புத்தாண்டுக்கும் நமக்கும் சம்பந்தமுண்டா?அதுவும் இல்லை?ஏன் இந்த போலியான சம்பரதாயம்? ஏதோ வெள்ளைக்காரன் வந்தான், நம்மை மூளைச் சலவை செஞ்சுட்டு போயிருக்கான்….. யோசிச்சுப் பாருங்க….
imageமெக்காலே சொல்லிட்டுப் போனான். இப்போ நான் அறிமுகப்படுத்தர கல்வித்திட்டம் எதிர்காலங்களில் இந்தியர்கள் நிறத்தால் மட்டுமே கறுப்பர்களா இருப்பார்கள். நடை உடை கலாச்சாரத்தில் வெள்ளையர்களாக மாறி விடுவார்கள் என்று சொன்னது எவ்வளவு உண்மையாகி விட்டது?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். வந்தவர் நெளிந்தார்.
மீண்டும் அந்த அதிகாரி,”தப்பா எடுத்துக்காதீங்க…. இந்த தப்ப செய்யரவனே நல்லா அதிகம் படிச்சவன்தான் தான்….. அறிவு ஜீவிகள் தான்……வீட்டில வெளியே ஆங்கிலத்திலே பேசினாத்தான் கவுரவம்னு நினைக்கிறான்……ஆங்கில கலாச்சாரத்தை பின்பற்றது தான் பெருமைன்னு நினைக்கிறான். நமக்கு வெட்கமா இல்லே….. நாம ஒரு கிருத்தவனுக்கு வாழ்த்து சொன்னா ஏத்துக்கலாம்.சம்பந்தமே இல்லாத நாம ஏனுங்க இந்த வாழ்த்துக்களை பரிமாரிக்கணும்? அப்பொறம் வரிசையா அத்தனை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளைப் பார்த்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கணும், பரிசுகளை வழங்கணும்….இந்த கொடுமையெல்லாம் நம்ம நாட்டைத் தவிர வேறு எங்கும் நடக்காது… இதெல்லாம் வேண்டாம்னு தவிர்ப்பதற்குத்தான் இன்னைக்கு ஒருநாளைக்கு இங்க வந்தா, இங்கேயும் வந்துட்டிங்களே…..” விளாசி விட்டார்.
பிறகு அவருக்கு சாப்பிடுவதற்கு உணவு ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். அப்போது தான் தெரிந்தது, எங்களூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
“செருப்பில அடிச்சு கைல கருப்பட்டி கொடுத்த மாதிரி”ன்னு .
அன்றைக்குத்தான் நேரிலேயே பார்த்தேன்….
ஆங்கிலப் புத்தாண்டு விசயத்திலே நம்ம ஜனங்க குறிப்பா, மெத்த படிச்ச அறிவு ஜீவிகள் எப்போ திருந்து வாங்க?

யாருக்கும் வெட்கமில்லை!

July 11, 2015
ஆறு.தர்மபூபதி
கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாநகரில் தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு பிளஸ்டூ படிக்கும் மாணவி அளவுக்கு மீறீய மது போதையில் இருந்தது குறித்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டும், அதேபோன்று தொலைக்காட்சி சானல்களும் தங்கள் பங்குக்கு பரபரப்பாக விவாதங்களை நடத்தி தங்கள் வியாபாரத்தை கடை விரித்ததை அனைத்து மக்களுமே கண்டுகளித்தார்கள். பொதுவாகவே இப்போதெல்லாம் ஊடகங்களானாலும் சரி தொலைக்காட்சி சானல்களானாலும் சரி நேர்மையான நல்ல செய்திகளை (positive news) வெளியிடுவதில்லை. மாறாக எதிர்மறையான செய்திகளை (negative news) வெளியிடுவதிலே பெரும் அக்கறை கொள்கிறார்கள். காரணம் அவர்களின் வணிக நோக்கம். ஜனநாயகத்தின் ஐந்தாம் தூண் என்று சொல்லக் கூடிய பெரும்பாலான ஊடகங்களானாலும் சரி தொலைக்காட்சி சானல்களானாலும் சரி இது தான் இன்றைய உண்மையான நிலை. பிற மாநிலங்களிலும் குடிப்பதற்கு அனுமதியிருந்தாலும் தமிழக சீரழிவை அங்கு காண முடிவதில்லை.
images (3)இன்றைக்கு இந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி போன்று பள்ளி மாணவர்கள் சிறு குழந்தைகள் பெண்கள் போன்றவர்களும் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருதல் வேகமாக பரவி வருகிறது. படிக்கவா குடிக்கவா என்ற நிலையில் மாணவர்கள் சமுதாயம் வழி நடத்தப்படுகிறது. ஏன் நான்கு வயது குழந்தைக்கு மது கொடுத்து அந்த பச்சிளங்குழந்தை மது அருந்துவதை பார்த்து மட்டற்ற மகிழ்சி கொள்ளும் அளவிற்கு இந்த சமூகம் முன்னேறியிருக்கிறது.தமிழ் பெண்கள் அதுவும் இளம் பெண்கள் கூட குடிக்க ஆரம்பித்துள்ளது தமிழ் சமுதாயம் இந்த திராவிடக் கட்சிகளால் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இனி என்ன சாட்சி வேண்டும்? அந்தக் காலத்திலெல்லாம் அதாவது திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்றும் வரை குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒருவன் சமூகத்தின் பார்வையில் கீழ்த்தரமான மனிதனாக கருதப்பட்டான். ஊருக்கு வெளியே கள்ளுக்கடை இருக்கும் யாருக்கும் தெரியாமல் சில பேர் குடித்துவிட்டு வருவார்கள். குடித்துவிட்டு வருபவர்களை குடிகாரன் என்று சொல்லி யாருமே அந்தக் குடும்பத்தை நெருங்க மாட்டார்கள். குடிகாரன் என்ற சொல் சமூகத்தில் கடைநிலை சார்ந்தவனாகவும் ஒழுக்கமற்ற மனிதனாகவுமே கருதப்பட்டது. குடிப்பழக்கம் கொண்ட பெரிய மிகவும் வசதி படைத்த மனிதர்கள் கூட சமூகத்தில் தூற்றப்பட்டனர். குறிப்பாக பெண்களோ சிறுவர்களோ இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக சமூகத்தின் அடிமட்ட குடும்பங்களில் கூட அன்றைக்குப் பார்க்க முடியாது. 
அந்தக் காலத்திய தமிழ் திரைப்படங்களே இன்றைக்கு சாட்சியாக உள்ளன. திரைப்படங்களில் கதாநாயகன் உட்பட ஒழுக்கமான பாத்திரங்களில் வருபவர்கள் மது அருந்தும் காட்சிகளில் தோன்ற மாட்டார்கள். திரைப்படங்களிலே தோன்றும் கதாநாயகன் மது அருந்த மாட்டான். பொய் பேச மாட்டான். பிறருக்கு உதவி செய்வான், நல்ல தனி மனித ஒழுக்கத்திலே சிறந்து விளங்குவான். பிற பெண்களை தாயாக மதிப்பான். நல்ல தெய்வீக பற்று கொண்டு நீதி நேர்மை தர்மம் போன்றவற்றை தனது வாழ்வில் கடைபிடிக்கும் பண்பாளனாக கதாநாயக பாத்திரத்தை சித்தரித்திருப்பார்கள். அன்றைக்கு சமூகத்தில் தொன்னூறு விழுக்காடு மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். பத்து விழுக்காடு மனிதர்கள் தான் அன்றைய திரைப்படத்தில் வந்த வில்லன்கள் போன்று தீயபழக்கங்களுக்கு அடிமையாக வாழ்ந்தார்கள். இது நிதர்சனமான உண்மை. இன்னும் சொல்லப் போனால் குடிகாரன்களைக் கண்டால் பயந்து ஒடுவார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. imagesஆண் பெண் இளம் ஆண் பெண் சிறுவர்கள் குழந்தைகள் என எந்த பாகுபாடுமின்றி குடிக்கத் தொடங்கி விட்டனர். பெண்களின் சுதந்திரம் வேண்டி பாடிய பாரதி இன்றைக்கு இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்கதில்லையே என்று மீண்டும் பாடி உயிரையே மாய்த்துக் கொண்டிருப்பான்.  இன்றைக்கு வரும் திரைப்பட கதாநாயகன் மட்டுமல்ல அனைத்து கதாபாத்திரங்களுமே மதுவை குடிப்பது ஏதோ அன்றாட உணவு பழக்கம் போலவே குடிப்பதை தினசரிப் பழக்கமாகவே சித்தரிக்கிறார்கள். காரணம் சமூகத்தின் சில பேரிடமிருந்த இந்த போதைப் பழக்கம் திரைப்படத்துறையினரால் மிகைப்படுத்தப்பட்டு  இன்றைய இந்த சமூகம் யதார்த்தமான நிலையாக வாழத் தொடங்கி ஏற்றுக் கொண்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
images (1)அதைவிட மிகப் பெரிய அவலம் மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கமே மதுக்கடைகளை திறந்து வணிகம் செய்து கொண்டிருக்கிறது. குடிகாரன் பிள்ளை என்று அந்தக் காலத்தில் கேவலமாகப் பேசப்பட்ட நிலை மாறி தனது தந்தைக்கு பள்ளி செல்லும் சிறார் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வருவதையும் நாளடைவில் அந்த பள்ளி மாணவனும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதும், அந்த மாணவன் மூலமாக இதர பள்ளி மாணவர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மாணவியர்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை என்னவென்று சொல்வது? மது அருந்துபவன் தான் இன்றைக்கு சமூகத்திலே பெரிய மனிதனாக கருதப்படும் பழக்கம் வந்துவிட்டது. அன்றைக்கு மது அருந்தி அடிமையானவன் கூட தன் மகன் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடக் கூடாதே என்று நினைத்தான். ஆனால் இன்றைக்கு மது அருந்தாதவர்கள் தீண்டத்தகாத ஜன்மங்களாக கருதப்படுகிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. இந்த அவல நிலைக்கு யார் காரணம்?
download (1)வள்ளுவரை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் வீதியெங்கும் மதுக் கடைகளை திறந்து வைத்துள்ளார்கள். வள்ளுவர் என்ன குடிக்கவா சொன்னார்? வள்ளுவர் தான் எழுதிய திருக்குறளில் மது குடிப்பதை எதிர்த்து பதிவு செய்திருப்பது மட்டுமல்ல கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தையே எழுதியுள்ளார். திராவிட ஆட்சியாளர்கள் உண்மையிலேயே வள்ளுவரை பின்பற்றியா ஆட்சி செய்கிறார்கள். வள்ளுவருக்கு கோட்டம் எடுத்து விட்டால் போதுமா? வள்ளுவருக்கு சிலை அமைத்து விட்டால் போதுமா? வாயெல்லாம் வள்ளுவரைப் பாடிவிட்டு அந்த வாயாலேயே மதுவையும் மாமிசத்தையும் சாப்பிடும் இந்த அவல நிலை வேறு எங்காவது உண்டா? அன்றைக்கு பள்ளிகளில் நீதி போதனைகளை போதிப்பார்கள். எது நல்லது எது கெட்டது என்பதை பாரம்பரியக் கதைகள் வாயிலாக பண்பாட்டை போதித்தார்கள். கொடுமை,….. இந்தியாவின் போலி மதச்சார்பின்மையாளர்கள் அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள்.
unnamedஊடகங்களும் திரைப்படங்களும் விபச்சாரமா செய்கின்றன? அத்துனை தனி மனித ஒழுக்கக் கேடுகளையும் நியாயப்படுத்தி செய்திகளையும் திரைப்படங்களையும் வெளியிடுவது நியாயம் தானா? தொலைகாட்சி சானல்களில் வரும் தொடர்கள் தனி மனித ஒழுக்கத்தை சிதைக்கின்றன. தீய செயல்கள் தீர செயல்களாக சித்தரிக்கப் படுகின்றன. இந்த தொடர்களைப் பார்க்கும் பெண்கள் சிறுவர்கள் தாங்களும் இதைப் போன்று செயல்பட ஆரம்பிக்கின்றனர். ஆனால் இந்த அவலங்களை பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் பலர் நியாயப் படுத்துகின்றனர்.
அரசாங்கமும் சரி, இன்றைக்கு ஊடகங்களும் சரி சமூகத்திற்கு எதிராகவே இயங்குகின்றன. ஆனால் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்றைக்கு இந்த பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தான் இன்றைய நடுத்தர வயது இளம் வயது பெற்றோர்கள். பெரும்பாலான பெற்றோர்கள் பாசம் என்ற பெயரில் தங்கள் குழந்தைகளின் தனி மனித ஒழுக்கங்களை சிதறடிக்கிறார்கள். நன்கு படித்து பட்டம் பெற்ற தாய் தந்தையரின் குடும்பத்தில் பிறந்த மாணவி இந்த மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது எவ்வளவு கேவலம்.இன்றி இந்தக் குடும்ப மானம் ஊடகங்களிலும் தொலைக் காட்சி சானல்களிலும் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் இப்போது அழுது என்ன பயன்? மேற்கத்திய கலாச்சாரத்தை தனது குழந்தைகள் பின்பற்றும் போது அதைக் கண்டு மகிழும் பெற்றோருக்கு இது ஒரு பாடம்.  தங்கள் வளரும் குழந்தைகளை சீர்திருத்தி வளர்க்க முடியாமல் சிலர் தவிக்கிறார்கள். அந்தக் காலத்தில் தாய் தந்தையுருடன் மகன் வாழ்ந்த காலம். குடித்து விட்டு வீட்டிற்கு வருவது என்பது அபூர்வம். காரணம் பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என்ற பயம் இருந்தது. அது மட்டுமல்ல. தாத்தா பாட்டிகள் தங்களது பேரக் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் வகையில் பாட்டி கதைகள் சொல்வது வழக்கம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போது வெறும் சாப்பாட்டை மட்டும் ஊட்டமாட்டார்கள். பாசத்தையும் சேர்த்தே ஊட்டுவார்கள். அது மட்டுமல்ல அந்த சாப்பாட்டுடன் சின்ன நீதிக் கதைகள் தனி மனித ஒழுக்கங்களைப் போதிக்கும் சம்பவங்களையும் கதையாகவே சாப்பாட்டுடன் ஊட்டி விடுவார்கள். இது நமது நாட்டின் பண்பாடு. இன்றைக்கு தாத்தாவும் இல்லை பாட்டியும் இல்லை அம்மாவும் வேலைக்கு போய்விடுவாள் அப்பாவும் வேலைக்கு போய்விடுவார். போட்டு வைத்திருக்கும் சாப்பாட்டை தொலைக்காட்சி சானல்களை பார்த்து தானே சாப்பிட்டுக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு குழந்தைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இன்றைய சமூகம் வந்துவிட்டது.
123குடிப்பழக்கத்தால் பெண்கள் மட்டுமல்ல ஒரு குடும்பமே சீரழிகிறது. அதனால் தான் மகாத்மா காந்தி மது குடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று தனது பிரதான கொள்கையாக கொண்டார். இந்த போதனையை முன்வைத்து ஏதாவது ஊடகங்களோ அல்லது சானல்களோ பிரச்சாரம் செய்து வருகிறதா? அவர்கள் நோக்கம் வணிகம். அடுத்து பரபரப்பு செய்திகள் வரும் வரை ஒரு மாணவி குடித்து விட்டாள். குழந்தைக்கு மது தரப்பட்டது, இன்று ஒரு மாணவன் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தான் என்று, ஒவ்வொருவரும் விவாதங்களை அரங்கேற்றிவிட்டு பின்  இந்த பிரச்சனைகள் மறந்துவிடும் இந்தக் கேடு கெட்ட மனிதர்களை என்னவென்று சொல்வது? இந்த அவல நிலைக்கு யாரை குறை சொல்வது?

மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை!

தேசீய மந்திரமான வந்தே மாதரம்!

August 13, 2014
தர்மபூபதி ஆறுமுகம்

 

IMG_4190

 

“வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்”

விண்ணைப் பிளந்தது.  
ஆயிரக்கணக்கான தேசபக்தர்களின் வீர முழக்கம் கேட்டு ஆவேசமடைந்தனர் ஆங்கிலேய அதிகாரிகள். “அடக்குங்கள் ஒடுக்குங்கள்” என்ற அவர்களின் உத்தரவையடுத்து போலீசார் ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக தேசபக்தர்களைத் தாக்கத் தொடங்கினர். எங்கு பார்த்தாலும் தலை உடைந்தும் விலா எலும்புகள் நொறுக்கப்பட்டும் கைகள் முறிக்கப்பட்டும் ரத்தம் சொட்ட சொட்ட மக்கள் காணப்பட்டனர். ஆனாலும் ஒவ்வொரு தடியடித் தாக்குதலுக்கும், எதிர்த்தாக்குதலாக அவர்களின் வந்தே மாதரம் இடி முழக்கமாக முழங்கிக் கொண்டிருந்தது. தேச பக்தர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். வந்தே மாதரம் என்ற போர் முழக்கம் அந்த பகுதியையே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!  
போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிர் கொண்ட அந்தக் கூட்டம் நொடிப்பொழுதில் தேசபக்தியின் உணர்வுகளை ஒருமுகமாக வந்தே மாதரம் என்ற மந்திரம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தேசபக்தர்கள் அடிக்கப்பட்டார்கள், உதைக்கப்பட்டார்கள், இருந்த போதும் கூட்டம் கட்டுக்கோப்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தது. தாக்குதலில் சாலையோர சாக்கடையில் விழுந்தவர்கள் தங்கள் வலியையும் பொருட்படுத்தாது மீண்டும் போராட்டக் களத்தில் எழுந்து வந்து நின்றனர். உள்ளத்தின் அடிப்பாகத்திலிருந்து சொல்லி வைத்தார் போல் ஒரே குரலில் அனைவரும் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழங்கிய கர்ஜனை விண்னைப் பிளந்தது. வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களின் சுதந்திர தாகம் சூறாவளி காற்றாக என கரையை புரட்டிக் கொண்டிருந்தது.
       மேற்குவங்கத்தின் பாரிசால் வீதிகளில் எழுந்த இந்த சுதந்திர போர் முழக்கம், பாரத தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஒவ்வொரு இந்தியனின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. பாரிசால் வீதிகளில் முழங்கப்பட்ட வந்தே மாதரம்  தேசமெங்கும் எதிரொலித்தது. நாடெங்கும் வந்தே மாதரம் வந்தே மாதரம் கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. வந்தே மாதரம் என்ற இடிமுழக்கம் கேட்டு ஆங்கில அரசு நிலை குலைந்தது. இந்த கோஷங்கள் அவர்களுக்கு பல விதமான அச்சங்களை தந்தது. ஆங்கில அரசு செய்வதறியாமல் திகைத்தது. அவர்கள் காதுகளில் திரும்ப திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது…………… வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வங்கம் பிளக்கப்பட்டது, சிதைக்கப்பட்டது  என்ற செய்தி மக்களிடையே காட்டுத் தீயெனப் பரவியது. வங்கம் ஊனமாக்கப்படுவதையும் சிதைக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள விரும்பாத மக்களின் அடிமனதில் எரிமலை உருவாகிக் கொண்டிருந்தது. எரிமலையின் தீ நாக்குகள் சூடான ரத்தத்தை சுவைக்க காத்துக் கொண்டிருந்தது.
வங்கத்தைப் பிரிக்கக் கூடாது என சபதம் எடுக்கவும் ஆங்கிலேய மேலாதிக்கத்தையும், ஒடுக்கு முறையையும், எதிர்க்க வேண்டுமென்றும், அடிமைத்தனத்திலிருந்து தேசத்தை விடுவிக்க வேண்டுமென்றும் இந்திய தேசீய காங்கிரசால் முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவுகளை செயல்படுத்த வங்க மாகாண மாநாடு ஒன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது.  முதல் கட்டமாக அதற்கான ஒரு இடத்தை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கினர். ஆனால் ஏற்கனவே விதி வேறு விதமாக முடிவு செய்திருந்தது.
வங்கப் பிரிவினையைக் கேட்டதிலிருந்து பாரிசல் நகர மக்கள் அமைதியிழந்தும், கோபத்தோடும் ஆவேசத்துடனும் காணப்பட்டனர். வங்கம் பிரிக்கப்பட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை இதன் காரணமாக. பாரிசல் நகரம் போராட்ட களமாக மாறியிருந்தது. பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் இல்லாத நாள் இல்லை. வந்தேமாதரம் கோஷம் வானம், காற்று, நீர் என எங்கும் நீக்கமற நிறைந்திருந்தது. பாரிசால் நகரத்திற்கு பிறவிப் போராளியும் தேசபக்தருமான அஸ்வினிக்குமார் தத்தாவின் பிறந்த ஊர் என்ற பெருமையுமிருந்தது. அதுமட்டுமல்ல கிழக்கு வங்கத்தின் சுதந்திரப் போராட்டத்தின் நாடி மையமாகவும் திகழ்ந்தது. ஏற்கனவே அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பு மற்றும் சுதேசி போராட்டங்களில் அந்த நகரம் முன்னிலை வகித்தது. அதன் காரணமாக இயற்கையாகவே இந்நகரம் மீது வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு ஒரு கண் இருந்தது. உள்ளூர் போலீசார் போதாதென்று 600க்கும் மேற்பட்ட கூர்க்கா போலீசாரை அங்கு குவித்திருந்தனர்.
இவைகள் எல்லாம் பாரிசால் நகரை அமைதிப்படுத்த முடியவில்லை. வீறு கொண்ட தேசபக்தர்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் வந்தே மாதரம் விண்ணைப் பிளக்க லார்டு கர்சன் கொடும்பாவியை எரித்து அவருக்கு இறுதிச் சடங்கையும் செய்து விட்டனர். ஆங்கிலேய அரக்கர்களின் எலும்புகளின் மீதும் சாம்பல் மீதும் பாரத தாயை அரியணையில் அமர்த்த வேண்டும் என அப்போது சபதமெடுத்துக் கொண்டனர்.
ஆங்கிலேயனையோ அல்லது போலீசையோ மக்கள் பார்த்து விட்டால் உடனே வந்தே மாதரம் கோஷமிடுவது என்பது அப்போது பெருமைக்குரியதாக செயலாக கருதப்பட்டது. பாரிசால் நகரம் அந்த மாகாணத் தலைவர்கள் கூடும் பிரார்த்தனைக் ஸ்தலமாக மாறியது. தினமும் ஆயிரக்கணக்கானோர், தேசபக்தர்களின் ரத்தம் சிந்திய புண்ணிய பூமியை நோக்கி வந்து அஞ்சலி செலுத்தும் நகரமாக மாறியது பாரிசால் நகரம். இந்திய தேசீய காங்கிரசின்  வங்க மாகாண மாநாட்டிற்கு இதைவிட ஒரு தகுதியான இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என தலைவர்களால் முடிவு செய்யப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி, 1906 அன்று மாநாட்டை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டன. தேசபக்த போராளிகளை வரவேற்க அந்த நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. இதைக் கண்டு குலை நடுங்கிய ஆங்கில ஏகாதிபத்தியம் ஊர்வலத்தில் வந்தே மாதரம் என்ற மந்திரத்தை முழங்கக்கூடாது என்று தடை விதித்தனர். அந்த பாடலின் இரண்டு முதல் வரிகளை உச்சரித்தாலே அது பெருங்குற்றமாகும் என அறிவித்தது.
மாநாட்டில் கலந்து கொள்ள வங்கம் முழுதிருந்தும் பிரதிநிதிகள் வந்து குவிந்த வண்ணமிருந்தனர். அவர்களின் முகத்தில் உற்சாகமும் நம்பிக்கையும் கரை புரண்டு ஓடியது. அங்கு குவிந்திருந்த வங்கத்தின் பெரும் தலைவர்களெல்லாம் தங்களது பேச்சுக்களின் மூலம் குழுமியிருந்த பிரதிநிதிகளை உணர்ச்சி பிழம்பாக்கிக் கொண்டிருந்தனர். வங்கத்தின் முடி சூடா மன்னர் பாபு சுரேந்திர நாத் பானர்ஜி தானே முன்னிலை வகித்து மாநாட்டின் குறிக்கோள்களை தனக்கே உரிய பாணியில் தனது சிம்மக் குரலில் கர்ஜித்தார். வந்தே மாதரம் பாடலுக்கு ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தடைவிதித்தது குறித்து, அவர் இவ்வாறு பேசினார்:
 “நாங்கள் நீராவிப் படகுகள் மூலம் டாக்காவிலிருந்து பாரிசாலை நோக்கி காலையில் புறப்பட்டோம். இங்கு வந்து சேர்ந்த போது மாலை நேரம் ஆகிவிட்டது. ஆனால் இங்கு வந்ததும்,  கல்கத்தா மற்றும் இதர நகரங்களிலிருந்து வந்திருந்த மாநாட்டுப் பிரதிநிதிகள் படகுகளிலிருந்து இறங்காமல் எங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதை அறிந்தோம். அவர்கள் உள்ளங்களிலே எதிரொலித்துக் கொண்டிருந்த சில கேள்விகளுக்கு கரை இறங்குவதற்கு முன் விடை காண்பது அவசியம் என்ற முடிவில் எங்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காண விரும்பினர்.
வந்தே மாதரம் பாடுவதும் முழங்குவதும் பாரிசால் நகர வீதிகளில் மட்டுமல்ல கிழக்கு வங்கம் முழுதும் தடை செய்யப்பட்டுள்ளது. பாரிசாலில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரிகளிடம் வந்தே மாதரம் பாடலை, பிரதிநிதிகளை வரவேற்கும்போது வீதிகளில் பாடுவதில்லை என்று ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தம் நம்மை எப்படிக் கட்டுப்படுத்தும்? இளைஞர்களும், கொள்கைப்பிடிப்புள்ள தீவிர எண்ணம் கொண்டோரும் வந்தே மாதரம் பாடவேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இது குறித்த தீர்மானமான முடிவு எடுக்கப்பட வேண்டுமெனவும் விரும்பினர். இந்த உத்தரவு சட்ட விரோதமானது. இது குறித்து தகுதியான சட்ட ஆலோசகர்களிடம் விவாதித்துள்ளோம். வந்தே மாதரம் பாடல் தடை செய்யப்பட்டது குறித்து விவாதம் எழுந்தபோது அமிர்த் பஜார் பத்திரிக்கையின் ஆசிரியர் மோதிலால் கோஷ் “எனது தலையை வெட்டினாலும் நான் வந்தே மாதரம் பாடுவேன், வந்தே மாதரம் பாடலை விட எனது தலை ஒன்றும் மதிப்பு வாய்ந்ததல்ல” என்று வாதிட்டார். நம்முடைய ஆட்சேபத்தை எங்கு எப்படி சமர்ப்பிக்க முடியும்? தன்னிச்சையான சட்ட அங்கீகாரம் பெறாத அமைப்பிடம் முறையிட  நமது தன்மானம் தடுக்கிறது. ஒப்பந்தத்தில் பிரதிநிதிகளை வரவேற்கும்போது வந்தே மாதரம் பாடக்கூடாது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அதற்கும் மேலாக வேறு ஒன்றும் இல்லை. இதை ஏற்றுக் கொள்வது தான் பாரிசால் தலைவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும் என்றும் இதர நேரங்களில் வந்தே மாதரம் பாடத்தடையில்லை என்பதால் வந்தேமாதரம் பாடலாம் என்ற எங்கள் முடிவை ஏற்றுக்கொண்ட பிறகுதான், வங்கம் முழுதும் வந்திருந்த பிரதிநிதிகள் படகை விட்டு பெருமை மிகு பாரிசால் நகரினுள் நுழைந்தனர்.” IMG_4214
ஏப்ரல் பதினான்கு….
மாநாடு நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக ஹவேலி ராஜா அரண்மணையிலிருந்து மாநாட்டுத் திடலை ஊர்வலமாக சென்று அடைவது என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொண்டர்கள் மூன்று, மூன்று பேராக ஒவ்வொரு வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். அவர்களின் கைகளில் பதாகைகளும் வங்கப் பிரிவினையை எதிர்த்து கோஷங்கள் அடங்கிய அட்டைகளையும் கையில் ஏந்தியவாறு உற்சாகம் கரை புரள அணி வகுத்து நின்று கொண்டிருந்தனர். வந்தே மாதரம் தாங்கிய பாட்ஜ்கள் சட்டையை அலங்கரித்தன. வந்தே மாதரம் பாடலை அமைதியாக பாடியவாறு மாநாட்டுத் திடலை சென்று அடைவது என அவர்களுக்கு தலைவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது..
மதியம் இரண்டு மணி….
மாநாட்டுத் தலைவர் பாரிஸ்டர் ரஸூல் தனது வெள்ளைக்கார மனைவியுடன் அலங்கரிக்கப்பட்ட தனது கோச்சில் அமர்ந்தவாறு ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். பாபு சுரேந்திரநாத் பானர்ஜி, அமிர்த் பஜார் பத்திரிக்கையின் ஆசிரியர் மோதிலால் கோஷ், புபேந்திர பாசு முதல் வரிசையை அலங்கரிக்க, அவர்களுக்கு அடுத்த வரிசையில் பிபின் சந்திரபால், அரவிந்த்கோஷ் மற்றும் இளம் தலைவர்கள், சமூகத்தில் பிரபலமான மரியாதைக்குரிய பிரமுகர்கள், படித்த இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் தாய் நாட்டு விடுதலைக்காக தன் உயிரையே தியாகம் செய்ய  எழுச்சியோடு அணிவகுத்து நின்றனர். ஊர்வலம் இன்னும் முழுமையாக துவங்கவில்லை. தொண்டர்கள் இன்னும் ஊர்வல வீதியை அடையவில்லை, வந்தே மாதரம் பாடல் இன்னும் முழங்கவில்லை. தொண்டர்கள் கம்பீரமாக தலையை உயர்த்தி வீர நடை போட ஆரம்பித்தனர். இந்த இளம் தேச பக்த படையின் மிடுக்கைப் பார்த்த மாத்திரத்திலேயே ஆங்கிலேய ஏகாதிபத்திய போலீசாருக்கு ஆவேசம் வந்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி, எச்சரிக்கையுமின்றி திடீரென்று பின்வரிசையிலுள்ள தொண்டர்களை போலீசார் ஆவேசமாகத் தாக்கத் தொடங்கினர். நிராயுதபாணிகளான அந்த பாரதத் தாயின் தவப் புதல்வர்களை ஆறடி நீளம் கொண்ட தடியால் கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினர்.
தங்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்த்தாக்குதலாக அவர்கள் வாயிலிருந்து முழங்கியது வந்தே மாதரம். ஆயிரக்கணக்கானோரின் வந்தே மாதரம் இடி முழக்கமாக பாரிசால் நகரையே வியாபித்தது. தாக்குதலில் அவர்களின் தலையில் இருந்தும் கைகால்களிலிருந்தும் ரத்தம் ஆறாக பாரிசால் வீத்யில் பெருக்கெடுத்தோடியது. நிலை தடுமாறி விழுந்த தொண்டர்களின் தேகங்களை போலீசாரின் கால்கள் துவம்சம் செய்தன. தங்கள் நெஞ்சங்களில் அவர்கள் அணிந்திருந்த பாட்ஜ்கள் பிடுங்கி எறியப்பட்டன. ஆனால் அவர்களின் உள்ளங்களில் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திர தாகத்தை யாரால் அழிக்க முடியும்? தாக்குதலில் நிலை குலைந்தாலும் வந்தே மாதர முழக்கம் உச்சத்தை எட்டிக் கொண்டே இருந்தது. பாட்ஜ்களுக்குப் பதிலாக அவர்களது மார்புகளை ரத்த காயங்கள் அலங்கரித்தன.
“நாங்கள் அலங்கோலமாக வீதிகளில் சென்றோம். சுற்றறிக்கை எதிர்ப்புக் குழு தொண்டர்கள் ஹவேலி பிரதான வீதியில் நுழைந்த போது ஏற்கனவே திட்டமிட்டபடி போலீசார் அவர்கள் மீது தாக்குதலைக் கண்மூடித்தமனமாக தொடங்கினர். கனத்த தடிகளால் அவர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் அணிந்திருந்த பாட்ஜ்கள் கிழிக்கப்பட்டன. சிலர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல ஸ்வதேசி இயக்க உறுப்பினரும் சிறந்த பேச்சாளருமான பாபு மனோரஞ்சன் குஹா என்பவரின் மகன் சித்தரஞ்சன் குஹா ஆவார். இவர் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, தண்ணீர் நிரம்பிய தொட்டியிலும் வீசி எறியப்பட்டார். சிறிது நேரத்தில் சில தேச பக்தர்களது முயற்சியால் அந்த இளைஞர் காப்பாற்றப்பட்டார். இந்த இளைஞர்கள் எந்த பாவமும் செய்யாதவர்கள். அவர்கள் தாக்கப்படும் வரை வந்தே மாதர கோஷத்தை முழங்கவில்லை. அவர்கள் யாருக்கும் இடைஞ்சலோ தடைகளோ ஏற்படுத்தவில்லை. அவர்கள் செய்த தவறெல்லாம் கூட்டமாக பொது வீதிகளில் சென்றதுதான். அவர்கள் தாக்கப்பட்டது தான் தாமதம் வந்தே மாதரம் முழக்கம் விண்ணை எட்டியது”. (a nation making page 206)
வங்கம் பிரிக்கப்பட்டவுடன் புதிய வங்க கவர்னராக ஃபுல்லர் நியமிக்கப்பட்டார். பி சி லியோன் செயலாளராக நியமிக்கப்பட்டார். வங்க கவர்னர் ஆணைக்கிணங்க வந்தே மாதரம் பாடுவதை தடை செய்து செயலர் லியோன் உத்தரவிட்டார். இதன் பிரதிபலிப்பாக வங்கமெங்கும் தேசபக்தர்கள் ஆவேசமடைந்தனர். ஒவ்வொரு நகரங்களிலும் சிற்றூர்களிலும் தடை உத்தரவை எதிர்த்துப் போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் மக்கள் வந்தே மாதரம் பாட்ஜ் அணிந்தே வெளியில் சென்றனர். ராமானந்தராய், சசீந்திரகுமார் போஸ், கிருஷ்ணகுமார் மித்ரா போன்றோர் இந்தக் குழுக்களை முன்னின்று இயக்கினர். அரவிந்தரின் சகோதரர் பரிந்திரகுமார் கோஷ், ஸ்வாமி விவேகானந்தரின் சகோதரர் புபேந்திரநாத் தத்தா, சகோதரி நிவேதிதா இவர்களை பின்புலமாக வழி நடத்தினர். தடை உத்தரவு எதிர்ப்புக் குழுவினர் பாரிசால் மாநாட்டிற்கு திரளாக வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். வங்கம் முழுதும் வியாபித்திருந்த வந்தே மாதரம் அவர்கள் சுவாசிக்கும் மூச்சாக இருந்தது. வந்தே மாதரம், வந்தே மாதரம்……. என்ற இசை முழக்கத்திற்கு அவர்களின் நாடித்துடிப்பு தாளமாக அமைந்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்திய போலீசாரின் கோமாளி தாக்குதல் யுக்தி அவர்களையே களைப்படைய செய்து விட்டது. அவர்கள் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த கண்மூடித்தனமான கடும் தடியடித் தாகுதலை எதிர்கொண்ட வந்தே மாதரம் முழங்கிய தேசபக்தர்கள் சோர்வடையவில்லை. பாரிசால் நகரில் நடத்தப்பட்ட திட்டமிட்ட கொடூரமான தடியடிப் பிரயோகம் இந்தியாவிலேயே முதன் முதலாக இங்குதான் அரங்கேற்றப்பட்டது. ஆனால் இதுதான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கும் தேசீய உணர்விற்க்கும் இடையே நடக்கப்போகும் போருக்கு புதிய துவக்கமாகவும் அமைந்தது.. வந்தே மாதரம் புதிய போர் முழக்கம் ஆனது.
வயதான தலைவர்களும், பொது மக்களும், போலீசாரின் தாக்குதலுக்கு தப்பவில்லை. அவர்களும் கொடூர தடியடிக்கு ஆளாயினர். அவர்களின் தலைகளும் தாக்குதலுக்கு தப்பிக்கவில்லை. தேச பக்தர்களின் தலைகள் காயப்படுத்தப்பட்டனவே தவிர,  அவர்களின் உணர்வுளுக்கு காயங்கள் ஏற்படவில்லை. இளம் போலீஸ் அதிகாரிகள் அந்த வயதான தேசபக்தர்களை அவமதித்தனர். தேசீயத்தலைவர்களை எல்லாம் கிரிமினல் குற்றவாளிகள் போன்று அவமதிக்கப்பட்டு, ஜெயிலுக்குள் தள்ளப்பட்டனர். வங்க முடிசூடா மன்னர் சுரேந்திர நாத் பானர்ஜி கூட இந்த கொடுமையிலிருந்து தப்பவில்லை. அங்கு அவர் பெருத்த அவமானத்தை சந்திக்க நேர்ந்தது.  சுரேந்திர நாத் பானர்ஜி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். விடுமுறை நாளானதால் மாவட்ட நீதிபதி வீட்டிற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். மாவட்ட நீதிபதி முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்ட  சுரேந்திர நாத் பானர்ஜி தாம் கைது செய்யப்பட்ட விதம் குறித்தும், போலீசாரின் நடவடிக்கைகளையும் வன்மையாக கண்டித்ததோடு அரசாங்கத்தின் அடக்குமுறைப் போக்கை கடுமையாக சாடினார். ஆனால் நீதியை காப்பாற்ற வேன்டிய நீதிபதி எமர்சன் போலீசிற்கு சளைத்தவரல்ல என்பதை நிரூபித்தார். அவரால் சுரேந்திர நாத் பானர்ஜி கடுமையாக பேசிய பேச்சுக்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. கோர்ட்டை அவமதித்ததாக ரூ200 அபராதமும், ஊர்வலத்தில் கலந்து கொண்டதற்காக இன்னொரு ரூ 200 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டுமென்றும், அதன் மூலம் தான் வழக்கறிஞரை வைத்து வாதாடவும் சாட்சிகளை முன்னிறுத்தவும் வாய்ப்புத் தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவருடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதேபோன்று ஏனைய தலைவர்களின் வேண்டுகோள்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டன.
சுரேந்திர நாத் பானர்ஜி போன்ற தலவர்களெல்லாம் அபராதத்தை அப்போதே கட்டிவிட்டு சுதந்திரப் பறவைகளாக மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டனர். திட்டமிட்டபடி மாநாடு துவங்கியது. மாநாட்டுக்கு வந்திருந்த பிரதிநிதிகள் அனைவரும் தடியடியால் பாதிக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட பந்தலில் அமர்ந்திருந்தனர். அந்த நிலையிலும் எழுச்சியுடன் அனைவரும் ஒரே குரலில் வந்தே மாதரம் பாடலை பாடியது அனைவரது உணர்வுகளையும் தட்டி எழுப்பியது.
இதுபற்றி சுரேந்திரநாத் பானர்ஜி கூறும்போது, ”நண்பர்களுடன் மேடைக்கு நாங்கள் நுழையும் போது ஒரே மாதிரியான காட்சியை எங்களால் காண முடிந்தது. ஓரு மனிதருக்காக அங்கிருந்த அனைவரும் எழுந்து ஒரே குரலில் உணர்ச்சி ததும்ப வந்தே மாதரம் முழங்கியதை காணமுடிந்தது. அனைத்து நிகழ்சிகளும் சில நிமிட நேரங்கள் ஸ்தம்பித்திருந்தது.. .நாங்கள் எங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு ஒருவாறாக பழைய நிலைக்கு மாநாட்டு அரங்கம் திரும்பியது..
மேடையிலே ஒரு இளைஞர் தலையில் பலத்த கட்டுடன் தனது தந்தையுடன் நின்று ஆங்கிலேய ஏகாதியபத்தின் அடக்கு முறை குறித்தும் தான் போலீசாரால் எவ்வாறு தாக்கப்பட்டேன் என்றும் கூறிக்கொண்டிருந்தார். அதை ஆமோதிக்கும் வகையில் தனது மகன் தாக்கப்பட்டது குறித்து அவருக்கே உரிய பாணியில் உரையாற்றி அப்பாவும், மகனும், சாட்சியம் கூறுவது போன்று மாறி மாறி பேசி பார்வையாளர்களை தன்வயப்படுத்தினார்.,  அவர் தான் பாபு மனோரஞ்சன் குஹாவும் அவரது மகன்  சித்தரஞ்சன் குஹாவும் ஆவார்கள். பாபு மனோரஞ்சன் குஹா மிகப்பெரிய பேச்சாளர் இவரது மகனைத்தான் போலீசார் கடுமையாகத் தாக்கி தண்ணீர்த் தொட்டியில் வீசியிருந்தனர். அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப் பட்டார். அப்போதும் அந்த இளைஞன் ஒவ்வொரு அடி விழும்போதும் வந்தே மாதரத்தை விடாது முழங்கிக் கொண்டிருந்தான். தந்தையும் மகனுமாக மாறி மாறி தாங்கள் மீது ஏவப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை விவரித்த வந்த வண்ணமிருந்தனர். இந்த உணர்சி ததும்பும் பேச்சைக் கேட்டவர்களுக்கு, தங்கள் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாத ஒரு நினைவாக இவர்கள் பேச்சு அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சிகள்  பின்னர் ஓவியமாக வரையப்பட்டு 1906 கல்கத்தா கண்காட்சியில் வைக்கப்பட்டது, பின்னர் நாடு முழுதும் இந்த ஓவியங்கள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. (a nation in the making  p 209).
அன்றைய மாநாடு மாலையில் முடிந்து தொண்டர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லும்போது வந்தே மாதரம் முழங்கியவாறு சென்றனர் அடுத்த நாள் காலையில் மீண்டும் மாநாட்டிற்கு வரும்போதும் இந்த கோஷம் விண்ணைப் பிளந்தது
அடுத்த நாள் நிகழ்ச்சிகள் நட்ந்து கொண்டிருந்தபோது கெம்ப் என்ற போலீஸ் அதிகாரி திடீரென்று மேடைக்கு வந்து மாநாட்டுத் தலைவரிடம் ஒரு உத்தரவை வழங்கினார். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் உடனே கூட்டம் கலைந்து செல்ல வேண்டும். கூட்டத்திற்கு வந்திருப்போர் திரும்பி செல்லும் போது வந்தே மாதரம் பாடமாட்டோம் என்ற உறுதி மொழி வழங்கப்பட வேண்டும் என்றார். மாநாட்டுத் தலைவர் அதற்கு மறுக்கவே அந்த போலீஸ் அதிகாரியே மாஜிஸ்ட்ரேட் போட்ட 144 தடை உத்தரவை படித்து கூட்டத்தை கலைந்து போகும்படி கூறினார். இதைக் கேட்டதும் அங்கிருந்த மாநாட்டுப் பிரதிநிதிகள் ஆத்திரமடைந்தனர். பார்வையாளர்கள் இந்த உத்தரவிற்கு அடிபணிய மறுத்தனர். பிறகு தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பார்வையாளர்கள் கலைந்து வீதிகளில் சாரி சாரியாக வந்தே மாதரம் முழங்கிச் சென்றனர். மாநாட்டுப் பந்தலை நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இவ்வாறாக அந்த மாநாடு யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிந்தது.
கல்கத்தாவிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் திரும்பி செல்லும் போது வழி நெடுக ஒவ்வொரு ஊர் ரயில் நிலையங்களிலும் அந்தப் பிரதிநிதிகளைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டனர். எங்கும்  வந்தே மாதரம் எப்போதும் வந்தே மாதரம் என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த மக்களிடையே சுரேந்திர பாபு மற்றும் சகோதரி நிவேதிதா ஆகியோர் பேசும்போது, ”ஆங்கிலேய அரசாங்கம் போராளிகளையெல்லாம் எப்படியாவது சிறைகளில் அடைக்கத் திட்டமிட்டனர். ஆனால் நீங்கள் அந்த சூழ்ச்சியை முறியடித்து விட்டீர்கள். அவர்கள் போட்ட வலையில் அவர்களே சிக்குண்டு விட்டனர். இந்த வெற்றி உங்களையே சாரும்” சுரேந்தர நாத் பாபுவுடன் தடை உத்தரவை எதிர்த்து நடத்தும் போராட்டக் குழுத் தலைவர் பாபு கிருஷ்ண குமார் மித்ரா அவர்களும்  ரயிலில் உடன் சென்றார். சகோதரி நிவேதிதா பேசும் போது அவரது பேச்சு பாச உணர்வோடு இருந்ததால் மக்கள் பெரும் உணர்ச்சி வசப்பட்டனர். நாட்டின் விடுதலைக்காக உங்களுடைய உதிரங்களை தாய் மண்ணிற்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள். இந்த தியாகத்தின் மூலம் நீங்களும், வங்க மக்களும் உன்னத நிலையை அடைந்து விட்டீர்கள்”என்று பாச உணர்வோடு பேசினார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தான் போட்ட வலையிலேயே தானே சிக்குண்டு விட்டது என்று சகோதரி நிவேதிதா பேசியது உண்மையாகி விட்டது. பாரிசால் நகரில் போலீசார் நடத்திய வன்தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த வைஸ்ராய் லார்டு மின்டோ: அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தையும் ஊர்வலத்தையும் போலீசார் பேசாமல் விட்டிருந்தால் சுரேந்திர நாத் வேண்டுமென்றே கைது ஆவதற்கு வழி வகுத்திருக்காது. போலீசாரின் நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாகி விட்டது என்றும் வந்தே மாதரம் பாடலை பாடியதால் எந்த பேரழிவும் ஏற்படப் போவதில்லை. மாறாக அதை முறியடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆங்கிலேய ஆட்சிக்கு ஒரு பெரும் தீங்காக அமைந்து விட்டது என்றார். உள்ளூர் நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே சட்டரீதியானதாக கருத முடியாது, கவர்னர் ஜெனரலுக்கு இது புதிய தலைவலியை உண்டு பண்ணிவிட்டது என்றும், ஊர்வலத்தில் புகுந்து சுரந்திரநாத்தை கைது செய்தது சட்டபூர்வமாக சரி எனக் கூற முடியாது. மேலும் வந்தே மாதரம் பாடுவது சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்வது சட்டத்தை தவறாக புரிந்து கொண்டதற்கு சமம் எனவும் கருதினார். ( india under Morely and Minto by M.N.DAAS page 38-39)
நகரின் வீதிகளிலே நிராயுதபானிகளான சென்ற தேச பக்தர்களின் மீது நடத்திய போலீசாரின் காட்டு மிராண்டி தாக்குதல் பாரிசால் மண்ணில், உதிரத்தை தண்ணீராக இறைத்து சாகுபடிக்கு நிலத்தை பண்படுத்தியது போன்று இருந்தது. எதிர்காலத்தில் வளரப்போகும் சுதந்திர பயிரின் அறுவடைக்கு இது முன்னோடியாக அமைந்ததில் ஆச்சர்யமில்லை. எதிர்காலப் புரட்சிக்கு வந்தே மாதரம் என்ற புதிய போர் முழக்கத்துடன், விதைகளை விதைத்து விட்டுப் போயுள்ள அந்த மாநாடு ஒவ்வொருவர் மனதிலும் நீங்காத நினைவாக இருந்தது.
பாரிசால் மாநாடு துவங்குவதற்கு நான்கு நாட்கள் முன்னர் இண்டியன் எம்பையர் பத்திரிக்கை தலைவர்களுக்கு ஒரு அறைகூவல் விடுத்திருந்தது. அடிமைகளாகவே இருக்கப் போகிறீர்களா இல்லை அடிமை விலங்கை உடைக்கப் போகிறீர்களா என்பதை தீர்மாணிக்கும் நேரம் வந்து விட்டது. தேசபக்தர்களின் முனகல்கள் ஆட்சியாளர்களுக்கு துச்சமாகத் தெரியலாம், ஆனால் அதிகார வர்கத்திலிருப்பவர்களுக்கு இது கௌரவத்தைத் தராது என்று எச்சரித்தது. பாரிசால் மாநாடு பெயரளவிற்குக் கூட தீர்மாணங்களை நிறைவேற்றவில்லை. ஆனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை மாநாட்டு சம்பவங்கள் தெளிவாக காட்டிவிட்டது.
நடந்த சம்பவங்கள் குறித்து பத்திரிக்கைகள் ஆழமாகவும் கூர்மையாகவும் விமர்சனங்கள் செய்தன.
ஆடு மாடுகள் போன்று இதுபோன்ற காட்டுமிராண்டித் தாக்குதல்களுக்கு அடிபணிந்து போவதா, இல்லை, சுய பாதுகாப்பிற்காக, தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலா எது சிறந்தது என்பதை முடிவு செய்யுங்கள் என்று சந்தியா பத்திரிக்கை எழுதியது.
பயங்கரமான சூறாவளி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவர் உள்ளங்களிலும் ஒரு வெறியை தூண்டியுள்ளது. நெருக்கடி முற்றிவருகிறது. பாரிசால் நகரில் நடந்தது போன்று இனி திரும்ப எங்காவது நடந்தால் நாடு முழுக்க மக்கள் தங்களது உயிர்களைப் பற்றி கவலைப்படாமல் வெள்ளையர்களை பழி வாங்கும் சூழ்நிலை ஏற்படும். என்று ஆனந்த பஜார் பத்ரிக்கா (19.04.1906) குறிப்பிட்டிருந்தது.
மக்களின் பொறுமைக்கு எல்லை உண்டு. மக்களை தாக்க பயன்படுத்தும் அதே தடி ஆட்சியாளர்களின் தலைக்கே எதிராகவும் திரும்பக் கூடும் என்பதை மறந்து விடாதீர்கள் என வங்காளி (ஏப்ரல் 21) பத்திரிக்கை எழுதியது.
பாரிசால் தாக்குதலைக் கண்டித்து பாரத தேசத்தின் 30 கோடி மக்களும் ஒரு சேர குரல் கொடுக்க வேண்டும். தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலே ஒரே தீர்வு என முழங்கியது பரிந்தரா கோஷ்ஷின் யுகாந்திர பத்திரிக்கை.( ஏப் 22,1906)
உங்களுக்கு தன்மானம் இருந்தால் அது வெளிவரட்டும். இந்த அமைதி நமது தேசீய தன்மானத்திற்கு இழுக்கு…. தேசத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க பழிக்குப் பழி ஒன்றே சரியான பாதை, நஞ்சை நஞ்சால் மட்டுமே முறியடிக்க முடியும். எந்த நஞ்சால் நமது தேசத்திற்கு அவமானம் ஏற்பட்டதோ அந்த நஞ்சாலேயே அந்த அவமானம் துடைத்தெறியப்பட வேண்டும்  என்று மக்களைப் பார்த்து சாடியது மீண்டும் சந்தியா (ஏப் 28)
ஹிதவர்த்தா பத்திரிக்கை கீழ்கண்டவாறு தேசபக்தர்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தது:
“இதுபோன்று உலகின் எந்த மூலையிலாவது  நடந்திருந்தால் இந்நேரம் எம்மர்சன் தலை அவன் உடம்பிலிருந்து வெட்டப்பட்டு வீதிகளிலே வீசப்பட்டிருக்கும். இந்த விசித்திரப் பிறவியை உயர் பதவியில் வைத்து நாகரீமாக நடத்தும் போக்கு வேறு ஏதாவது நாட்டில் நடந்திருந்தால் இந்நேரம் அவனுடைய எலும்புகள் சுக்கு நூறாக நொறுக்கப்பட்டிருக்கும்……..
வருங்காலங்கள் அனைவருக்கும் இருண்டதாகவே காட்சியளிக்கிறது.. ஆயுதத்திற்கு எதிராக ஆயுதமே தீர்வு என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்ற ஆரம்பித்துள்ளது. ஒன்றுமே அறியாத அப்பாவி சிறுவன் சிந்திய ரத்தத்தை வெள்ளைக் கொடுங்கோலன் ரத்தத்தாலேயே கழுவப்பட வேண்டும். ஒரு புழு கூட தன்னை நசுக்கப்படும்போது கடித்துவிட்டுத்தான் சாகிறது. நாம்  எவ்வளவு நாட்களுக்குத்தான் பொறுமை காப்பது?…..
அமைதியான ஸ்வதேசி இயக்கம் வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்து விடுமோ என்று அஞ்சுகிறோம். வந்தே மாதரம் பாடுவதற்கு பதில் எம்மர்சன் தலையை கொடிக் கம்பத்தில் கட்டி தொங்கவிடும் நிலை வந்தால், அது  மக்களுக்கும் நல்லதல்ல ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல. வெள்ளை அரசாங்கம் ஆணவப்போக்கு கொண்ட இந்த மனிதரை ஆட்சியிலிருந்து நீக்காவிட்டால் இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான மனித நேயமற்ற தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்காவிடில், இப்பொழுது கொழுந்துவிட்டு எரியும் ஜ்வாலை இன்னும் ஆயிரக்கணக்கானோரின் ரத்தத்தை குடிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்…..
தேச பக்தர்களின் உதிரம் பாரதா மாதாவின் விடுதலைக்கு கொடுக்கும் விலை என்பதை மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டனர். அதற்காக என்ன விலையும் கொடுக்க தயாராகி விட்டனர் மக்கள்.. அவர்களை இனி யாரால் தடுக்க முடியும்?”
மஹான் அரவிந்தர் அப்போது எழுதினார்:
“கொடுங்கோலர்கள் பலமுறை முயன்றுள்ளனர். ஆனால் ஒரு முறையாவது நாட்டின் விடுதலைக்கு மனிதன் கொண்டிருந்த தாகத்தை அவர்களால் அடக்க முடிந்துள்ளதா? அடக்குமுறை, அடக்குமுறைக்கு எதிரான வலிமையை வளர்த்தே வந்திருக்கிறது. கொடுங்கோலர்களின் காலடிகளிலே நசுக்கப்படும்போது, எண்ணற்ற வடிவங்களில் புதிய முன்னைக் காட்டிலும் வலிமை கொண்டதாக புதிய அவதாரங்கள் தோன்றியிருக்கிறது. தோல்விகளிலிருந்தும், பட்ட துன்பங்களிலிருந்தும் அடக்குமுறைக்கு எதிராக புதிய எழுச்சி உருவாகியிருக்கிறது. சரித்திரத்தை திரும்பிப் பாருங்கள். அந்த எழுச்சி அடக்கு முறையாளர்களை தூக்கி எறிந்துள்ளது. இதுதான் சரித்திரத்தின் மூலம் நாம் அறிந்துள்ள பாடம். இதுதான் மனித குலத்திற்கு செய்தியுமாகும்.”
“விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள ஒருவகையான விஷப் பாம்பு போன்று அதற்கு கண் இருக்கும் ஆனால் பார்க்காது, காதிருக்கும் ஆனால் கேட்காது, அது போன்று இந்த கொடுங்கோலர்களுக்கு உலகளாவிய போதனைகளும், மனித குலத்திற்கான அன்பும் அவர்களிடம் இருக்காது. மனிதனின் மடத்தனமான மூர்க்கத்தனமான செயல்பாடுகள் ரத்தக் களரி மூலம் உலகிற்கு அழிவையே ஏற்படுத்தும்”.
பாரிசால் நகரில் நடந்த சம்பவங்கள் ஏழு கடல்களைக் கடந்து லண்டனிலுள்ள இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. போலீசாரின் காட்டுமிராண்டித்தனத் தாக்குதல் குறித்து இந்தியாவிற்கான செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இங்கிலாந்து அரசு இது தொடர்பான நடவடிக்கைகளை செயல்படுத்த  நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை. போலீசார் விதித்திருந்த பல விதமான கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள வைஸ்ராயிற்கு உடனடியாக உத்தரவிடப்பட்டது. கிழக்கு வங்க கவர்னருக்கு வைஸ்ராய் கீழ்கண்ட அறிவுரையை உடனடியாக பிறப்பித்தார்:
சமீப காலத்தில் நடந்த சம்பவங்களின் போது கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட 300 மாணவர்களை எந்த வித நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்ப சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், இந்த நடவடிக்கையை கிழக்கு வங்க மக்களின் இயல்பான நல்ல நடத்தை காரணமாக பெருந்தன்மையாக தாங்களாகவே முன்வந்து எடுப்பதாக இருக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும் வைஸ்ராய் குறிப்பிட்டிருந்தார். அதே போன்று இதுவரை வந்தே மாதரம் பாட மற்றும் ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த  தடை உத்தரவு சுற்றறிக்கையை திரும்பப் பெறப்படாமல் இருந்தால் அதற்கான உத்தரவும் ஒரே சமயத்தில் வெளியிட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
இதை உடனடியாக அமல்படுத்துவதன் மூலம் சமீபத்தில் நடந்த கசப்பான சம்பவங்களுக்கு இது மருந்தாக அமைவதோடு இதன்மூலம் வங்க மக்களின் நல்ல மதிப்பைப் பெற உங்களுக்கு இது உதவும் என்பதையும் நினைவில் கொள்ளுமாறு   அறிவுறுத்தியிருந்தார்.
இந்த சலுகைகள் ஆங்கிலேய அரசின் பலவீனத்தை குறிப்பதாக மக்கள் கருதி விடக் கூடாது, அப்படி கருதினால் பல அபாயகரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். என்றும், வன்முறைக்கு தூண்டுகோலாக அமையும் என்று ஆங்கிலேய அரசு கருதியதையே இந்த அறிவுரை தெளிவுபடுத்தியது.
“பாரிசாலில் நகரில் நடந்த சம்பவங்கள் தேசீய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஒரு பெரிய தாகத்தை ஏற்படுத்தியது. போலீசாரின் அத்துமீறிய தாக்குதல் நடவடிக்கைகள் வங்ககத்தில் மட்டுமின்றி பாரத தேசம் முழுக்க விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 21 அன்று சென்னையில் போலீசாரின் அட்டூழியத்தை எதிர்த்து நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தில் 8000க்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கலந்து கொண்டனர்”என்று டைம்ஸ் ஆப் இந்தியா (28.04.1906) ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
சென்னையில் நடந்த கண்டனக் கூட்டத்திற்கு, கூட்டம் ஆரம்பிக்க பல மணி நேரங்களுக்கு  முன்னதாகவே வந்தே மாதரம் பாடியபடி பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சாரி சாரியாக வந்தனர். போலீஸ் அடக்குமுறையை எதிர்த்து கோஷமிட்டனர். (a nation in the making p215)
ஆங்கிலேய அடக்குமுறையைக் கண்டித்து நாடெங்கும் ஆங்காங்கே எதிர்ப்பு கூட்டங்கள் நடைபெற்றன. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து அந்த கூட்டங்களில் கடுமையாக கண்டனம் எழுப்பபட்டது. வந்தே மாதரம் நாடு முழுதும் எதிரொலித்தது. வந்தே மாதரம் ஒவ்வொரு பேரணிகளிலும் முழங்கப்படும் மந்திரமானது. வந்தேமாதரம் அழுத்தத்துடன் பூமிக்குள் இருக்கும் தண்ணீர் வெளியே வர ஆயிரக்கணக்கான இடங்களில் பீறிட்டுக் கொண்டு வருவது போல, அடக்குமுறைக்கு எதிராக நாடெங்கும் குரல் கொடுக்க வந்தே மாதரம் ஒரு மந்திரமானது.
வந்தே மாதரம்
          பாரத தேசத்து மக்களை ஒன்றிணைக்கும் துடிப்புமிக்க                                       மந்திரமானது.
அந்நிய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கும் போர் முழக்கமானது.
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து பாரத அன்னையை விடுவிக்க சபதம் பூண்டுள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் தேசீய மந்திரமானது,
வந்தே மாதரம்.
 

வந்தே மாதரம்.

தாயே வணங்குகிறோம்
இனிய நீர்,இன்சுவைக்கனிகள் 
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை 
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை 
எங்கள் தாய் 
தாயே வணங்குகிறோம் 
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள் 
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள் 
எழில்மிகு புன்னகை 
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள் 
எங்கள் தாய் 
சுகமளிப்பவளே  வரமருள்பவளே 
தாயே வணங்குகிறோம்  
கோடிக் கோடிக் குரல்கள்  
உன் திருப்பெயர் முழங்கவும்  
கோடிக் கோடிக் கரங்கள்  
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்  
அம்மா ! ‘அபலாஎன்று உன்னை அழைப்பவர் எவர் ? 
பேராற்றல் பெற்றவள் பேறு தருபவள்  
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்  
எங்கள் தாய்  
தாயே வணங்குகிறோம்  
அறிவு நீ  அறம் நீ இதயம் நீ உணர்வும் நீ   
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ  
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ  
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்  
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ   
தாயே வணங்குகிறோம்  
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்  
அன்னை துர்க்கை நீயே  
செங்கமல மலர் இதழ்களில் உறையும்  
செல்வத் திருமகள் நீயே  
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே  
தாயே வணங்குகிறோம்  
திருமகளே  
மாசற்ற பண்புகளின் மனையகமே  
ஒப்புயர்வற்ற எம் தாயகமே  
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே  
கருமை அழகியே   
எளிமை இலங்கும் ஏந்திழையே
 புன்முறுவல் பூத்தவளே 
பொன் அணிகள் பூண்டவளே 
பெற்று வளர்த்தவளே 
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே 
தாயே வணங்குகிறோம் !

 

மூலம்: the story of a song by Shri Shivramu

இப்படியும் நடக்குமா?

February 14, 2012
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
சென்னை மந்தைவெளி நார்மன் தெருவைச் சேர்ந்தவர் ர. உமா மகேஸ்வரி (39). இவர் பாரிமுனை அரண்மனைக்காரத் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் ஹிந்தி மற்றும் வேதியியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். பள்ளியின் முதல் மாடியில் உள்ள 10-ம் வகுப்பு சி பிரிவு வகுப்பறையில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் உமா மகேஸ்வரி அமர்ந்திருந்தார். அப்போது 9-ம் வகுப்பு ஏ பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவர், அங்கு வந்து இருக்கையில் அமர்ந்திருந்த உமா மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியால் குத்தினாராம். அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், அவரது வயிற்றில் குத்தினாராம். உடனடியாக தப்பியோட முயன்ற அந்த மாணவரை, வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் பிடிக்க முயன்றனர். ஆனால், கத்தியைக்காட்டி மிரட்டியபடி, கழிப்பறைக்குள் சென்று அந்த மாணவர் ஒளிந்து கொண்டார். இதற்கிடையே மாணவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த வகுப்புக்கு வந்த மற்ற ஆசிரியர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த உமா மகேஸ்வரியை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆசிரியையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
             ஆசிரியையைக் கொலை செய்ததாகக் கூறப்படும் மாணவரின் தந்தை ரபீக், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர். ரபீக் துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மகன் சரியாகப் படிப்பதில்லையாம். வகுப்பில் மிகவும் அமைதியாகக் காணப்படும் இவரது மகன், சக மாணவர்களோடு சரியாகப் பேசிப் பழக மாட்டார் என்று கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன்பு ஹிந்தி பாடம் சரியாக படிக்கவில்லை என்று அந்த மாணவரை உமா மகேஸ்வரி கண்டித்தாராம். மாணவரின் தர அறிக்கைச் சான்றிதழில் படிப்பில் கவனம் இல்லை என்று உமா எழுதினாராம். மேலும், பெற்றோரை அழைத்து வரும்படி அந்த மாணவரிடம் கூறினாராம். இதனால் 2 நாள்களுக்கு முன்பு அந்த மாணவரின் தந்தை ரபீக், உமாவை சந்தித்தாராம். அப்போது மாணவர் சரியாகப் படிப்பதில்லை என்றும், இப்படிப் படித்தால் 9-ம் வகுப்பில்கூட தேர்ச்சி பெற முடியாது என்றும் உமா தெரிவித்தாராம். ஸ்பிளனேடு காவல்நிலையத்தில் வைத்து மாணவரிடம் போலீஸôர் விசாரணை செய்தனர். முதலில் போலீஸôரிடம் முரண்டுபிடித்த அவர், பின்னர் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.அந்த மாணவர் சரியாக படிப்பதில்லை என அவரது பெற்றோரிடம் உமா புகார் கூறினாராம். இதன் காரணமாக, அவரை பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து ஆசிரியை உமாவை கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் அந்த மாணவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி வருங்கால இளையதலைமுறையினர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. சுமார் ஐம்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்ப பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக்கு மாணவர்களை கொண்டுவந்து விடும்போது, குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் சொல்வதை நானும் ஒருசகமாணவன் என்ற முறையில் கேட்டிருக்கிறேன்.என்ன சொல்வார்கள் தெரியுமா? 
சார், சரியாக படிக்கவில்லையென்றாலோ, நடத்தை சரியில்லையென்றாலோ கண்ணை மட்டும் விட்டுவிட்டு, தோலை உரித்து எடுத்துருங்க சார் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.அதனுடைய அர்த்தம் மாணவர்களை கண்டிக்க முழு உரிமையை ஆசிரியருக்கு வழங்கியிருக்கிறேன் என்பதன் பொருள்தானது.அன்றைய பெற்றோர்கள் அப்படியிருந்தனர்.ஆனால் இன்றைய பெற்றோர்களின் மனோ பாவம் நேர் எதிர் மாறாக இருக்கிறது. 
ஒன்றை நினைத்துப் பாருங்கள். ஆசிரியை இறந்ததற்கு பதிலாக ஒரு மாணவன் இறந்திருந்தால் நிலமை எப்படியிருந்திருக்கும்? அரசியல் கட்சிகள் முதல், மாணவர்களின் பெற்றோர்கள் வரை ஊடகங்களின் துணை கொண்டுஒரு பெரிய நாடு தழுவிய பிரச்சாரமே அரங்கேறியிருக்கும். ஆனால் ஒரு அப்பாவி இளம் ஆசிரியை, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரு ஆசிரியை ஒரு இளம் பாலகனால் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறான் என்றால் அந்தகொடுமையை கண்டிக்க பெரிய அளவில் யாருமே முன்வராதது இந்த சமூகம் எப்படி மோசமான நிலையை எட்டியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். 
இந்த நிலைமைக்கு யார் காரணம்? 
முன்பெல்லாம், ஏன் இப்போதுகூட என்னைப் போன்றோர் தான் படித்த ஆசிரியரைக் கண்டால் இன்று கூட அதாவது என் அறுபதோறாவது வயதில் கூட பயம் கலந்த மரியாதை உள்ளது.(நான் பெரிய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றும் கூட) உட்கார்ந்திருந்தால் உடனே எழுந்து நின்றுவிடுவேன்.வழியில் எங்கு பார்த்தாலும் காரைவிட்டு இரங்கி உரிய மரியாதை செலுத்திய பின்னரே செல்லுவேன்.அந்த அளவிற்கு அவ்வளவு மரியாதை ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு இருந்தது. நமது கலாச்சாரம் நமக்கு போதித்தது மாதா, பிதா, குரு, தெய்வம். 
அந்த அளவிற்கு குருவை மதித்த நாடு இது.
இந்த நாட்டிலா இப்படி?
இந்த கொடுமைகளுக்கு யார் காரணம்?
பெற்றோர்களா? மாணவர்களா?
இல்லை ஆசிரியர்களா?
மாறிவரும் கலாச்சாரமா?
இல்லை அரசாங்கமா?
இல்லை இவை அனைத்துமா? 
பெற்றோர்களா?
இன்றைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பெரியவர்களுக்கு மரியாதையை தரவேண்டும் என்று போதிப்பதில்லை.ஒழுக்கத்தை சொல்லிக் தருவதில்லை.நியாயங்களைக் கடைபிடிக்க வேண்டுமென்ற நீதிகளை சொல்லித் தருவதில்லை.அந்த காலத்தில் தாய்மார்கள் நல்ல நீதிபோதனை கதைகளை சாதம் ஊட்டும்போது சேர்த்து ஊட்டுவார்.அந்த பிஞ்சு மனதில் ஆழமாக பதிந்துவிடும்.தனது அந்திமக் காலம் வரை அவன் நினைவிலே அது இருந்து கொண்டே இருக்கும்.பிறருக்கு துன்பம் செய்யக் கூடாது, முடிந்தவரை உதவி செய்ய வேண்டும்.பொறாமைப் படக்கூடாது என்றெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார்கள், போதாதற்கு மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியக் கதைகளில் உள்ள நற்பண்பு சம்பவங்களைக் கூறிக்கொண்டேயிருப்பார்கள்.ஆனால் இன்று
தனது குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் யாரும் கண்டிக்கக் கூடாது.அந்த உரிமை ஆசிரியருக்கு இல்லை.எனது மகன் எப்படியிருந்தால் இவர்களுக்கென்ன? இவர்கள் யார் அவர்களை கண்டிக்க என்பது இன்றைய பெற்றோர்களின் மனநிலை.அதுமட்டுமல்ல, மானமே பெரிது என்ற வாழ்ந்த நாட்டிலே, இன்றைய தாய் மார்கள் தங்களது பெண்கள் கவர்ச்சியாக உடைஉடுத்துவதையே விரும்புகிறார்கள்.தங்களது பெண்ணை காட்சிப் பொருளாக இருப்பது குறித்து பெருமைப் படுவோர் இன்று ஏராளம்.அந்த அளவிற்கு மேலை நாட்டுக் கலாச்சாரம் நம்மை சீரழித்து வருகிறது.அந்த பெண் குழந்தைகள் வயதுவந்த நிலையில் பிற்காலத்தில்அவர்களின் போக்கு குறித்து பெற்றோர் வருந்துகின்றனர்.காலம் கடந்து வருந்துவதில் என்ன பயன்? 
ஆசிரியர்களா?
ஆசிரியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்!அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்க்கொண்டுள்ளனர்.அந்த காலத்தில் குரு என்று சொல்லக் கூடியவர் ஒரு அர்ப்பணிப்பு மனம் கொண்டவராக இருப்பார்.மாணவனுக்கு போதிக்கக் கூடிய நீதிகளை தனது வாழ்விலே கடைபிடிக்கும் பண்பு அவர்களிடம் இருந்தது.இன்று ஆசிரியர்கள் அப்படியில்லை.மாணவர்களுடன் சேர்ந்து மதுஅருந்துவதிலிருந்து அனைத்து கெட்ட சகவாசங்களும் அவர்களிடம் உள்ளது.ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.பெரும்பாலானவர்கள் குருவாக இருப்பதில்லை.காரணம் அப்படியிருப்பதெல்லாம் அந்தக் காலம்.ஆசிரியர் நண்பன் போன்று இருக்கவேண்டும் என்று மேலைநாட்டுப் பாணியில் இருப்பதையே பலர் விரும்புகின்றனர்.ஆனால் தனக்கு பாதிப்புஎன்று வரும்போது தான் இதெல்லாம் தவறு என்று உணர்வர். அப்போது வாதிட்டு என்ன பயன்? 
கலாச்சார மாற்றங்களுக்கு தொலைக்காட்சிகள்காரணமா? 
இதைபற்றி எழுதுவதென்றால் பக்கம்பக்கமாக எழுதிக்கொண்டேயிருக்கலாம். அவ்வளவு கலாச்சார சீரழிவு, நாகரீகம் என்ற பெயரில் நடந்து கொண்டுள்ளது. அதை வெளிச்சம் போட்டுக் காட்டி இப்படியெல்லாம் தவறாக நடப்பது தவறல்ல என்று தினசரி தொலைகாட்சிகளிலே, நாடகங்கள் என்ற பெயரில் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம்.நமது பிரதமர் வாஜ்பாய் என்று வைத்துக் கொள்ளுங்கள்.வயதில் மிகவும் மூத்தவர் தொண்னூறை நெருங்கிக்கொண்டிருப்பவர்.நாம் அவரைப் பார்த்தால் என்ன செய்வோம்.காலைத்தொட்டு வணங்குவோம்.உடனே எழுந்து கைகூப்பி வணங்குவோம். அவரிடம் பேசும்போது பயபக்தியுடன் அய்யா அய்யா என்று மெதுவாக சற்று தாழ்ந்த குரலில் பேசுவோம்.இது பயமல்ல, மரியாதை. அவரது வயதுக்கு கொடுக்கும் மரியாதை இது நமது பண்பாடு.
ஆனால் இப்போது அப்படியா…?
ஒரு பதினாறு வயதுகூட  நிரம்பாத இளம்பெண் வாஜ்பாய் அவர்களிடம் பேட்டிகாண வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்..கொஞ்சம் கற்பனை செயுங்கள்.அந்த பெண்மணி அரைகுரை ஆடையுடன் வாஜ்பாய் அவர்கள் முன்வந்து அமர்ந்து கால் மேல் கால்போ ட்டு, ஹலோ மிஸ்டர் வாஜ்பாய் என்று அழைத்து பேட்டியைத் தொடங்குவார்.இந்த பெண்மணியின் வயது என்ன? அந்த பெரியவரின் வயது என்ன? இது மேலை நாட்டு கலாச்சாரம். இதைத்தான் வெள்ளையன் போனபிறகும் நமது அறிவு ஜீவிகள் நாகரீகம் என்று போற்றி வளர்க்கின்றனர். இவைகளுடைய தொடர்ச்சிதான் இன்று சகஜமாகிப் போன  அம்மா,  மம்மி ஆன கதையும் கூட. 
ஆசிரியையை குத்திக்கொன்றது ஏன்? 
9ம் வகுப்பு மாணவர் முகமது இஸ்மாயில் இந்தி ஆசிரியை உமா மகேஸ்வரியை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றார். இதையடுத்து அந்த மாணவர் மீது சட்டக்கல்லூரி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை ரகசியை இடத்தில் வைத்து விசாரித்தபோது பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவனது வாக்குமூலத்தின் ஒரு பகுதி: 
நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்’ கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார். 
எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார். 
இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது. ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது. 
அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது  (http://tamil.oneindia.in/news/2012/02/10/tamilnadu-why-did-the-9th-std-student-kill-his-teacher-aid0128.html) 
மாணவனின் மனோபாவத்திற்கு திரைப்பாடமும் ஒரு காரணம் என்பதை விவரிக்கவும் வேண்டுமோ? 
அரசாங்கமா?
இந்த சீரழிவுகளுக்கு காரணம் அரசியல்வாதிகள் இயக்கும் அரசாங்கமே  மிகப்பெரும் பங்கு வைக்கிறது என்பது எனது கருத்து.அந்தக்காலத்தில் நீதிபோதனை வகுப்பு என்று ஒரு வகுப்பு இருக்கும்.அதில் மனிதனின் வாழ்விற்கு தேவையான மனபக்குவம் பெறும்வகையில் அந்த சிறு வயதிலே பசுமரத்தாணி போல படியும் வண்ணம் நீதிகளை கதைகளின் வாயிலாக ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.அது அந்த பிஞ்சு உள்ளங்களிலே பதிந்து நேர்மையாகவும், மனசாட்சிப்படியும் நடக்க தூண்டும்.ஆனால் இன்று மதச்சார்பின்மை என்று பேசி அந்த நீதிபோதனை வகுப்பையே எடுத்துவிட்டார்கள்.காரணம் அரசியல்வாதிகளுக்கு தேவை வாக்கே தவிர, நீதியல்ல.அதை ஒழித்த பெருமை அரசையே சாரும். அதுமட்டுமல்ல தொலைக்காட்சிகளில் அந்தரங்கங்களை அரங்கிற்குள் கொண்டுவருவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.நியாயங்களுக்கு துணை போகும் போக்கு அரசிடம் இல்லை.தவறுகளை கண்டிக்க அரசு பயப்படுகிறது.உதாரணத்திற்கு சட்டக் கல்லூரி மாணவர்கள்.கல்லூரிக்குள்ளேயே சகமாணவர்களை அடித்து நொறுக்குகிற காட்சியை தொலைக்காட்சிகளிலே மெய்சிலிர்க்க பார்த்துள்ளோம்.அவர்களுக்கு ஏதோ சட்டத்தில் தனி விலக்கு கொடுத்திருப்பது போல அத்துமீறி நடக்கிறார்கள்.அரசும் இந்த அக்கிரமங்களை கண்டு கொள்வதில்லை.சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருமென்று.இத்தகைய போக்கு மெல்ல மெல்ல இது போன்ற வன்முறைகளுக்கு ஊக்கமளிக்கும். 
மாணவர்களா? 
மாணவர்கள் மீது பெரிய அளவில் குறைகூறிப்பயனில்லை என்பதே எனது அபிப்பராயம்.காரணம் அறியா வயது என்பார்கள்.அவர்களை மனிதனாக மாற்றுவதில் பெரும்பங்கு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தான். அவர்களை தவறான பாதைக்கு செல்லாமல் தடுக்கவேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு பெருமளவில் இருக்கிறது.மாணவர்களை தவறான பாதைக்கு இட்டு செல்வதில் தொலைக்காட்சி சானல்கள் முதலிடத்தை வகிக்கிறது. ஆக அனைவருமே கலாச்சார சீரழிவிற்கு காரணமாகியிருக்கின்றனர். 
ஆக இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவேண்டுமென்றால் மேற்கண்ட அனைவருமே பொறுப்புடனும், கடமையுடனும் செயல்படவேண்டும்.மேற்கத்திய கலாச்சாரத்தை ஒதுக்கி மீண்டும் நமது கலாச்சாரத்தை பேணிக்காப்பதே இன்றைய அவசரத்தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்.